• முகப்பு
  • த்ரில்லிங்காக தொடங்கிய மகளிர் உலகக் கோப்பை – 6 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது 3 விக்கெட்டுகள

த்ரில்லிங்காக தொடங்கிய மகளிர் உலகக் கோப்பை – 6 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது 3 விக்கெட்டுகள

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மகளிர் கிரிக்கெட்டின் மிக முக்கியமான தொடராக கருதப்படும் 50 ஓவர் உலக கோப்பை தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. 8 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் ஒருநாள் கிரிக்கெட் முறையில் விளையாடப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக முக்கிய ஐசிசி கோப்பையை இந்திய அணி வெல்ல தவறி வருவதால் இந்த மகளிர் உலகக் கோப்பையில் அந்த கனவு சாத்தியப்படும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இந்த தொடரை எதிர்நோக்கியுள்ளனர். தொடரின் முதல் நாளான இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. பே ஓவல் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹெய்லி மேத்யூஸ் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். மற்ற ஆட்டக்காரர்களும் இவரைச் சுற்றி விளையாடி நல்ல நல்ல பார்ட்னர்ஷிப்புகளை அமைத்துக் கொடுத்தனர். மேத்யூஸ் சிறப்பாக விளையாடி 128 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தை சேர்ந்த லீ தஹூஹு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.அதன்பிறகு ஆட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு விளையாட்டு வீராங்கனைகள் எல்லாம் வருவதும் போவதுமாக இருந்தனர். கேப்டன் சோஃபி டிவைன் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி சதம் கடந்தார். மற்றவர்கள் மோசமாக விளையாடிய காரணத்தினால் நியூஸிலாந்து அணிக்கு கடைசி நேரத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டது. கடைசியில் விக்கெட் கீப்பர் கேட்டி மார்ட்டின் 47 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கொடுக்க ஆட்டம் சூடு பிடித்து கடைசி ஓவர் வரை சென்றது.கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் நியூசிலாந்து கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தன. வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த டாட்டின் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் மற்றுமொரு ரன் அவுட் மூலம் நியூசிலாந்து அணியின் இன்னிங்சை முடித்து வைத்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டமே மிகவும் சிறப்பான ஆட்டமாக அமையப் பெற்றதால் ரசிகர்கள் மற்ற ஆட்டங்களையும் எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended