மர்ஹூம் சாலிஹ் ஞாபகார்த்தக் கிண்ணம்: பாலமுனை "றை ஸ்டார் பிங்" வசமானது

எஸ்.அஷ்ரப்கான்

UPDATED: Apr 13, 2024, 2:22:14 PM

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகம் நாடாத்திய கரப்பந்தாட்ட போட்டியில் "றை ஸ்டார் பிங்" அணியினர் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றினர்.


பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட மற்றும் சிறந்த கரப்பந்தாட்ட வீரருமான மர்ஹூம் சாலிஹ் அவர்களின் ஞாபகார்த்தமாக அக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி நேற்று (12) மாலை பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசியத் தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் 
பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகவும், செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான நியாஸ் ஆதம் நட்சத்திர அதிதியாகவும், றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர்களான அதிபர் கே.எல்.உபைதுல்லா, எஸ்.ரீ.வாஹிட், கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஐ.மனாப், செயலாளர் சிபான் அசீஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.


இக்கரப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு "றை ஸ்டார் பிங்" மற்றும் "றை ஸ்டார் வோரியஸ்" ஆகிய அணியினர் தெரிவு செய்யப்பட்டு "றை ஸ்டார் பிங்" அணியினர் 21:15, 21:19 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டனர்.

இதன்போது நட்சத்திர அதிதியாகக் ககலந்துகொண்ட சட்டத்தரணி நியாஸ் ஆதம் வெற்றிபெற்ற "றை ஸ்டார் பிங்" அணியினருக்குரிய வெற்றிக் கிண்ணத்தினையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

VIDEOS

Recommended