தமிழ் வழக்காடு மொழி எப்போது?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உயர் நீதிமன்றத்தில் தமிழ்? சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக்கொண்டு வர வேண்டும் என முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, உயர் நீதி மன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதி மன்றத்துக்கும் அனுப்பினார். சென்னை உயர் நீதி மன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், அன்றைய தலைமை நீதிபதி ஏ. பி. ஷா தலைமையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, தமிழைக்கூடுதல் வழக்காடு மொழியாகக்கொண்டுவர ஆதரவு தெரிவித்தார்கள். மத்திய சட்ட அமைச்சகத்துக்குத் தமிழக சட்டமன்றத்தீர்மானம் அனுப்பி வைக்கப் பட்டது. அவர்களும் தமிழைக்கூடுதல் வழக்காடு மொழியாகக்கொண்டுவருவதற்கு ஆதரவு தெரிவித்து, உச்ச நீதி மன்றத்தின் கருத்தை அறிவதற்காக அனுப்பிவைத்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் முதுநிலை நீதிபதிகள் குழு, இதனை ஆராய்ந்து அடிப்படைக்கட்டமைப்பு வசதியிருந்தால் இதைப்பற்றிப் பரிசீலிக்கலாம் என்றது. இதன் தொடர்ச்சியாக அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் எவையெவை என்பது குறித்த விவரங்கள் பெறப்பட்டது. ஆங்கிலத்தில் வெளிவந்து உள்ள அனைத்து இந்தியச்சட்டங்களும் இந்தியில் மொழிபெயர்ககப்பட்டிருப்பதுபோல், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதனை நிறை வேற்றுவதற்காக எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு 2018 - ல் அன்றைய மாநில அரசு, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தை உருவாக்கியது. ஆணையத்தின் வழியாகக்கடந்த மூன்று ஆண்டுகளாக ‘இந்திய அரசமைப்பு’ தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு, அதிகாரபூர்வமாக வெளியானது. மற்ற சட்டங்கள் அனைத்தையும் தமிழில் மொழி பெயர்ப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன. கணினியில் தமிழ் பயன் படுத்துவதற்கான மென் பொருள், அதைப்பயன்படுத்துவதற்கான பயிற்சி போன்றவற்றை நீதிமன்ற ஊழியர்களுக்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் எளிதில் கிடைப்பதற்கான வசதிகள் செய்யப் பட வேண்டும். பயிற்சிமுகாம் நடத்திட வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளில் தாங்களாகவே தமிழ் மென் பொருளைப் பயன் படுத்தித் தட்டச்சு செய்யும் முறையைப்பலரும் சொந்த முயற்சியால் பெற்று வருகிறார்கள். இதற்கான எந்தத் திட்டமும் அமலாக்கப்படவில்லை, பயிற்சியும் வழங்கப்படவில்லை. சட்ட நூல்களும் சட்ட இதழ்களும் தமிழில் வெளிவருவதை உறுதி செய்ய வேண்டும். நிதியுதவி அளிக்கப் பட வேண்டும். பொது நூலகங்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களின் நூலகங்கள், நீதி மன்ற நூலகங்கள் அனைத்திலும் தமிழ்ச்சட்ட நூல்களையும் இதழ்களையும் வாங்கி அனைவரும் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். தமிழில் சட்டப் புத்தகங்கள் வெளியிடவும் சந்தைப் படுத்தவும் நூலகங்களுக்குக் கொண்டு செல்லவும் சென்னை உயர் நீதிமன்றமோ, தமிழகச்சட்டத் துறையோ, தமிழ் வளர்ச்சித்துறையோ, வழக்கறிஞர்கள் பெரு மன்றமோ எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் ‘தீர்ப்புத்திரட்டு’ என்னும் தலைப்பிலான நூல்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிட்டுவருகிறது. இந்த இதழ் பொது வெளியிலோ, பொது நூலகங்களிலோ, நீதி மன்ற நூலகங்களிலோ எளிதில் கிடைப்பதில்லை. எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மூலமாக வாங்கிக்கொண்டிருந்த சட்ட நூல்களை, வாங்குவதை நிறுத்தி விட்டது மட்டுமல்லாமல், புதிதாக வாங்கப்படுகிற பட்டியலில் சட்டம் குறித்த எந்த ஒரு நூலோ இதழோ சேர்க்கப்படவில்லை. இதற்கான தேர்வுக்குழுவில் சட்ட அறிஞர்கள் யாரும் சேர்க்கப் படவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,200 கீழமை நீதி மன்றங்கள், தீர்ப்பாயங்கள், அதில் பணியாற்றும் நீதிபதிகள், நூலகங்களுக்குத் தமிழ்ச்சட்ட நூல்களை வாங்கி விநியோகிக்க உயர் நீதிமன்றத்துக்கு இது நாள் வரையில் மாநில அரசும் மத்திய அரசும் உரிய நிதியுதவி அளிக்கவில்லை. இதனால், கீழமை நீதி மன்றங்களுக்குத் தமிழ்ச்சட்ட நூல்கள், இதழ்கள் வாங்குவது தடையாக உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி நிதி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி நிதி போன்றவற்றின் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி தமிழ்ச் சட்ட நூல்கள், தமிழ்ச்சட்ட இதழ்கள் வாங்குவதற்கு விதிகள் இன்றுவரை தடையாக உள்ளன. சட்ட நூல்கள் வாங்குவதற்காகத் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்குத் தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் மானியமாகத்தந்தது. இதில் வாங்குவதற்கான பட்டியலில் தமிழ்ச் சட்ட நூல்களும், தமிழ்ச்சட்ட இதழ்களும் சேர்க்கப் படவில்லை. இதனால் 170 வழக்கறிஞர் சங்கங்களுக்கு அனுப்பப் பட்ட நூல்களில் தமிழ்ச்சட்ட நூல்களோ, தமிழ்ச்சட்ட இதழ்களோ இடம் பெறவில்லை. அந்தந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களின் மொழிகளை வழக்காடு மொழியாகக் கொண்டு வரும் முயற்சிக்குக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து ஊக்கமளித்துவருகிறார். அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்காக சென்னை வந்தபோது, வழக்காடு மொழியாகத்தமிழ் வர வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி விஜயா கே. தகில் ரமணியும் பெருமுயற்சி எடுத்தார். குடியரசுத்துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் மாநில மொழிகள் வழக்காடு மொழிகளாக ஆக்கப்படுவதற்குத் தொடர் ஆதரவு கொடுத்து வருகிறார். கடந்த மேமாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடை பெற்ற மாநாட்டில் உரையாற்றிய இந்தியத்தலைமை நீதிபதி ரமணா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத்தமிழைக் கொண்டுவருவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப் படும் என்றார். அதே மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் சென்னை உயர் நீதிமன்ற மொழியாகத்தமிழைக் கொண்டுவர அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் என்றார். இவ்வளவு தொடர் நடவடிக்கைகளும் முயற்சியும் இருந்தும் கூட தமிழ் வழக்காடு மொழியாக வரவில்லை .

VIDEOS

RELATED NEWS

Recommended