• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், குடிநீர் கேட்டு வீதிக்கு வந்த கிராம மக்கள்! போக்குவரத்து கடுமையாக பாதிப்பு!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், குடிநீர் கேட்டு வீதிக்கு வந்த கிராம மக்கள்! போக்குவரத்து கடுமையாக பாதிப்பு!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 27, 2023, 1:47:07 PM

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ்உள்ள 7 ஊராட்சிகளுள் ஒன்று கூடங்குளம் ஊராட்சி ஆகும்.இந்த ஊராட்சியில் கூடங்குளம், சிவசுப்பிரமணியபுரம், வைராவி கிணறு ஆகிய சிற்றூர்கள் அமைந்துள்ளன.

இந்த சிற்றூர்கள் அனைத்துக்கும், கடந்த ஒரு மாத காலமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால், இங்குள்ள மக்கள் காலையிலும், மாலையிலும் குடங்களை தூக்கிக்கொண்டு, அங்குமிங்குமாக அலைந்து, திரிந்து, இரண்டு, மூன்று கிலோ மீட்டர் பயணித்து, மிகுந்த சிரமத்துடன் குடிநீரை சுமந்து வந்து, தங்களுடைய வீடுகளில் சேர்க்கின்றனர்.

குடிநீரின் இத்தகு மோசமான நிலை குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு, பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.

குடிநீருக்காக கூடங்குளம் ஊராட்சி மக்கள், நாள்தோறும் சீரழிந்து, சின்னாபின்னமாகி, பல சங்கடங்களை சந்திக்க வேண்டியதுள்ளது.

இதனால் ஆத்திரமும்- கோபமும் அடைந்த கூடங்குளம் ஊராட்சி மக்கள், இன்று (மே.27) காலையில், கூடங்குளம்- ராதாபுரம் பிரதான சாலையில், திடீரென காலிக்குடங்களுடன், சாலையின் நடுவில் உட்கார்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடங்குளம் ஊராட்சி அலுவலர்களும், காவல்துறை அதிகாரிகளும், போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்னும் ஓரிருவாரங்களில், கூடங்குளம் குடிநீர் பிரச்சனைக்கு, நிரந்தர தீர்வு காண்பதாகவும், அதுவரையிலும் குடிநீர் கிடைத்திட, மாற்று ஏற்பாடுகள் செய்வதாகவும், அவர்கள் உறுதி அளித்தனர்.

இந்த உறுதிமொழியை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அனைவரும், அமைதியாக கலைந்து சென்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended