• முகப்பு
  • district
  • பேருந்துகள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் சா.சி.சிவசங்கர்

பேருந்துகள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் சா.சி.சிவசங்கர்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல உசேன் நகரம், கோட்டைமேடு, கொட்டரை, ஆதனூர், மதுராகுடிகாடு, கூத்துார் ஆகிய கிராமங்களுக்கு, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியம், கரம்பியம், பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி மற்றும் லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 16,000 நபர்களுக்கான குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (13.07.2022) அடிக்கல் நாட்டினார்கள். இந்நிகழ்வில் ஆலத்துார் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. பெரம்பலுார் மாவட்டத்திற்கு எண்ணிலடங்கா திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றார்கள். இன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மேல உசேன் நகரம், கூத்தூர், கொட்டரை , கோட்டைகாடு , ஆதனூர், மதுராகுடிகாடு ஆகிய கிராமங்களில் உள்ள 8,664 நபர்கள் பயன் பெறும் வகையிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒதியம் , கரம்பியம் , பெரியம்மாபாளையம் , மூங்கில்பாடி மற்றும் இலட்சுமிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 7,111 நபர்கள் பயன் பெறும் வகையிலும் என மொத்தம் சுமார் 16,000 நபர்களுக்கான குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் தலா ரூ.1.28 கோடி வீதம் ரூ.2.56 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வேப்பூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு ஆழ்துளைக் கிணறுகளுடன், புதிதாக 150 மி.மீ விட்டமுள்ள புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படவுள்ளது, அதேபோல ஆலத்துார் ஒன்றியத்தில் உள்ள இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த குடிநீர் திட்டப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீராக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் தாமதமாகியது. தற்போது அதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது, எனவே விரைவில் இதற்கான டெண்டர் கோரப்பட்டு அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கை துவங்கப்படும். 8 அல்லது 9 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை முடித்து விரைவாக புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில் புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் என்பதை நிர்மாணித்தவர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். தனியார் வசம் இருந்த பேருந்துகளை அரசுடைமையாக்கி நகர்புறத்தில் மட்டும் இயங்கி வந்த பேருந்துகளை கிராமப்புறங்களுக்கும் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள். முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்படுகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் பேருந்துகளை தனியார் மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மாணவர்களுக்கான இலவச பயண திட்டம், பெண்களுக்கான இலவச பயண திட்டம் என இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பான முறையில் திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள். எனவே இந்த திட்டங்கள் எப்போதும் போல தொடரும். ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை நான் பொறுப்பேற்ற பிறகு இரண்டாம் கட்டமாகவும், மொத்தமாக ஐந்து கட்டங்களாகவும் நடைபெற்றுள்ளது. ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண பட வேண்டியுள்ளது. விரைவிலே அதற்கான முடிவு எடுக்கப்படும். தற்போது சென்னையில் அரசு மினி பேருந்துகளை இயக்க புதிய வழித்தடங்களை கண்டறிந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன அவற்றில் எவ்வளவு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தேவை என்பதை கணக்கெடுத்து, பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாஸ்கர், ஆலத்துார் வட்டாட்சியர் முத்துக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended