கழி(த்)தல் இன்பம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கழி(த்)தல் இன்பம் எந்த சுகத்தையும் நாம் சுமந்து திரிய முடியாது. உண்டு களித்தாலும், கண்டு களித்தாலும் அதை கழிக்காத வரை துன்பமே செய்யும். கழிப்பறை என்பது எதையும் நம்மால் சேர்த்து வைத்து கொள்ள முடியாது என்பதை போதிக்கும் ஞான பள்ளி. ஒரு குழந்தையை பத்து மாதத்திற்கு மேல் வயிற்றில் வைத்துக் கொள்ள முடியாது. ஒரு காதல் முதலிரவோடு முற்றுப்பெறுகிறது. கடனைச் போல் எல்லா உறவுகளும் காலப் போக்கில் கழிந்து போகிறது. இளமை எத்தனை நாள் நம்மோடு வரும்.? நினைவுகள் வெறும் கழிவுகள். கடந்து போனதை நினைத்து வருந்துவது , மலத்தை கிளறுவது போல் ஆகும். எதை எதை இன்பம் என்று சுமந்தோமோ, அதை அதை அவ்வப்போது இறக்கிவிட வேண்டும். எப்படியெல்லாம வாழ்ந்தேன் என்று ஏங்குவது பிணத்தோடு வாழ்வது போன்றது. இப்போது இருக்கும் ஏழ்மை வாழ்க்கை என்றாலும் அது நமக்கான பரிசு. உண்மை புரிந்தவனுக்கு மண்ணும் மாணிக்கமும் ஒன்றுதான். எல்லாம் மண்ணில் விளையும், பின் மண்ணிற்கே இரையாகும். காணும் யாவும் விண்ணின் பொருட்களே. ஒரு அலையில் தோன்றி மறையும் சம மதிப்புள்ள பரவெளி சொந்தங்களே யாவும். குளிர்மாளிகையில் இருப்பவனும், குப்பையோரம் கொசுக்கடியில் வாழ்பவனும் ஒரே சொந்தங்கள். பிறப்பும் இறப்பும் யாரையும் உயர்வாக பார்ப்பதில்லை. உயிரை சேமிக்கும் பண்டசாலை பிரபஞ்சத்தில் எங்கும் கிடையாது. நமது நாட்கள் கூட தினமும் கழிகிறது. மனிதன் இயற்கையின் கழிவு . அறிவு , அலங்காரங்கள் நம் அழகை கெடுக்கின்றன. இந்த இற்றுப் போகும் நாற்ற உடம்பை எத்தனை நாளைக்கு ஆடைகளால் மூடி மறைக்க முடியும்? உன் அழகிய பேச்சு குளறும். ஆசை உடம்பும் தளர்ந்து போகும். மானம் மறந்து போகும் முதுமை. ஆடை நழுவினால் அசிங்கம் தெரியாது. ருசிகண்ட வாயும் உணவை வெறுக்கும். சேர்த்த சில்லறைகள் உன்னைப் பார்த்து சிரிக்கும். சாகும் தருவாயில் சமைந்த குமரியைப்போல் உனது செல்வங்கள் உன்னை சல்லாபம் செய்ய அழைக்கும். ஏக்க பெருமூச்சும் ஓர்நாள் கழிந்து போகும். சிறுநீர் கழிப்பதைப் போல் உங்கள் ஆசைகளை கழித்துவிடுங்கள். எல்லாம் நம்மை விட்டு போகும் என்ற ஞானத்தோடு வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் பயணியுங்கள். துன்பமெல்லாம் இன்பமாக தோன்றும். மகிழ்வோம்.மகிழ்ச்சி செய்வோம் ***அனுபவஸ்தன் ***

VIDEOS

RELATED NEWS

Recommended