• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவர்: புதிய எஸ்.பி., மணிவண்ணன் பேட்டி!

கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவர்: புதிய எஸ்.பி., மணிவண்ணன் பேட்டி!

வாசுதேவன்

UPDATED: May 25, 2023, 8:16:23 PM

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவர் என்று வேலூர் புதிய எஸ்பியாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட மணிவண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவர். அது யாராக இருந்தாலும், எந்த அரசியல் பின்புலத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கையை காவல்துறை கட்டாயம் மேற்கொள்ளும்.

குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பிரச்னைக்கு முதலில் நிரந்தர தீர்வு காண அதற்குண்டான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

இதற்கு ஆலோசனைகள் மற்றும் புதிய வியூகங்கள் தெரிந்தவர்கள் அலுவலக வேலை நேரங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

அவர்களது கருத்துக்கள் பரிசீலனை செய்யப்படும். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்டன் சூதாட்டம் ,கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

குறிப்பாக பொதுமக்கள் ஏதாவது புகார்களை தெரிவிக்க விரும்பினால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக whatsapp எண்: 9894111133 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

புகார்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும். யாரும் இது தொடர்பாக பயப்படத் தேவையில்லை. குறிப்பாக வேலூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றுவோரின் இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். வீதி வீதியாக காவலர்கள் வலம் வந்து பாதுகாப்பை பலப்படுத்துவார்கள்.

காவல்துறையை நம்பி பொதுமக்கள் நிம்மதியாக அவர்களது இல்லங்களில் உறங்கலாம். இது உடனடியாக அமல்படுத்தப்படும். நான் ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவில் பணியாற்றிய முன் அனுபவம் இருக்கிறது என்பதால், வேலூர் மாவட்டத்தை பற்றி ஓரளவு எனக்கு தெரியும்.

ஆதலால் வேலூர் மாவட்டத்தில் குற்றங்கள் இல்லாத அளவுக்கு முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். செய்தியாளர்கள் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வசதியாக ஒரு காவல் உதவி ஆய்வாளர் நியமிக்கப்படுவார்.

அவர் மூலம் செய்தியாளர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம். அத்துடன் மாதம்தோறும் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் எனது தலைமையில் தவறாது நடைபெறும். அப்போது மாவட்டத்தில் உள்ள குறைகளை என்னிடம் நேரில் தெரிவியுங்கள், குற்றங்களை களைந்து நடவடிக்கை எடுக்க நான் என்றென்றும் காத்திருக்கிறேன்.

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை எப்பொழுதும் வேலூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து பின்பற்றி நடந்து கொள்ளும். ஒழுங்கீனமாக யாரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்.

காவல்துறை தேவையான உதவிகளை பொதுமக்களுக்கு எப்பொழுதும் செய்ய தயாராக காத்துக் கொண்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் யார் என்று உலகுக்கு தெரிய அவர்களது முகம் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்படும்.

முன்பு இருந்தது போல அவர்களது முகங்களை மறைத்து பத்திரிகையாளர்களுக்கு இனி காண்பிக்கப்பட மாட்டாது. குறிப்பாக இது போன்ற நிகழ்வுகள் காட்பாடி காவல் சரகத்தில் நடப்பதாக தெரியவந்துள்ளது.

இனி அவ்வாறு இருக்காது இவ்வாறு வேலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மணிவண்ணன் தெரிவித்தார்.

இதையடுத்து வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என அனைவரும் புதியதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended