• முகப்பு
  • district
  • மணப்பாறை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா.

மணப்பாறை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரில் சுமார் 226 ஏக்கர் பரப்பளவில் மரவனூர் பெரிய குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 16 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய பருவ மழையின்றி இந்த குளம் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக குளம் முழுவதுமாக நிரம்பியது. கோடைகாலம் என்பதால் மரவனூர் பெரியகுளத்தில் தண்ணீர் குறைந்தது. தண்ணீர் குறிப்பிட்ட அளவு குறையும் நிலையில் குளத்தில் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம். கடந்த 16 ஆண்டுகளாக போதிய மழையின்றி குளம் நிரம்பாததால் மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை. குளத்தில் அதிக அளவிலான மீன்கள் இருந்த நிலையில் தண்ணீர் குறைந்து விட்டதால் இன்று மீன்பிடி திருவிழா அதிகாலை 6 மணிக்கு துவங்கியது. மரவனூர் செடல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர் முக்கியஸ்தர் கபில்தேவ் குளத்தின் கரையில் இருந்து வெள்ளை நிறத்துண்டை தலைக்கு மேல் சுழற்றி மீன்பிடிக்க உத்தரவுவழங்கியதால் மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக நின்றிருந்த பொதுமக்கள் மீன்பிடிக்க உத்தரவு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் குளத்தில் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்பிடிக்கத்துவங்கினர். இதில் கட்லா, விரால், குரவை, ஜிலேபி கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றனர். இந்த திருவிழாவில் மரவனூர், குளவாய்ப்பட்டி, களராம்பட்டி தெற்குகளம், இடையபட்டி, உள்ளிட்ட சுற்றுப்புற 18 பட்டி கிராமங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த மீன்பிடி திருவிழாவில் அதிக அளவிலான மீன்கள் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதில் சிலருக்கு 5 கிலோ அளவிலான பெரிய மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.

VIDEOS

RELATED NEWS

Recommended