• முகப்பு
  • crime
  • குற்றவாளியின் நாடகத்தை அறியாத காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் அவரின் உயிரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

குற்றவாளியின் நாடகத்தை அறியாத காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் அவரின் உயிரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்.இவர் காஞ்சிபுரம் வட்டார கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கத்தில் செயலாளராக பணிபுரிகின்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் உள்ளனர். சங்க உறுப்பினர்களுக்காக நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், தவணை முறையில் உறுப்பினர்களுக்கு வீடு ஒதுக்குதல் உள்ளிட்ட செயல்களிலும், வீட்டு அடமானக் கடன் பெற்றவர்கள் செலுத்திய தவணைத் தொகைக்கு போலி ரசீது அளித்தும் சுமார் 45 லட்ச ரூபாய் வரை மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் செல்வம் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வாய்தா என்பதால் செல்வத்தை புழல் சிறையிலிருந்து காவல்துறை வேனில் பாதுகாப்புடன் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் (ஜேஎம் 2) நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். சென்னையில் இருந்து கிளம்பும் போது காவல்துறையினர் அளித்த காலை சிற்றுண்டியை சாப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்த காலதாமதம் ஏற்பட்டதால் மதியம் சாப்பாடு காவல்துறை அளித்துள்ளனர். அதனை சாப்பிட செல்வம் மறுத்துள்ளார். இந்நிலையில் செல்வத்திடம் போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றிய 45லட்ச ரூபாய் பணத்தை கட்ட முடியுமா என நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது. பணம் கட்ட இயலாது எனக் கூறிய செல்வத்துக்கு பெயில் அளிக்காமல் "மீண்டும் 15 நாட்கள்" சிறை தண்டனை அளித்து குற்றவியல் நீதிமன்றம் ஜேஎம்2 மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். பெயில் கிடைக்காததாலும், மீண்டும்15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதாலும் அதிர்ச்சியடைந்த செல்வம், "நீதிமன்ற வாசலில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு கீழே விழுந்து சுயநினைவு இன்றி" கிடந்ததாக கூறப்படுகிறது. புழல் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட கைதி நீதிமன்ற வாசலில் மயங்கி விழுந்தது வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவி காவல்துறையினர் இடையே பெரும் கலக்கத்தை உண்டாக்கியது. மேலும் செல்வத்துடன் வந்த (எஸ்கார்டுகள்) பாதுகாப்பு காவலர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். செல்வத்தின் உடல் வாகு மிகவும் பெரியது என்பதால் அவரை காவல்துறையினரால் அசைத்து கூட பார்க்க முடியவில்லை. ரிமாண்ட்க்கு கொண்டு செல்லவிருந்த கைதியின் நிலை இப்படி ஆகிவிட்டதே என்ற பதட்டத்தில் செய்வதறியாது திகைத்த எஸ்கார்டுகள் தங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆயுதப்படை ஆய்வாளர் ஆனந்தராஜ், விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் தங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துவிட்டு செல்வத்தை மீட்டு 108 ஆம்புலன்சில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் செல்வத்தை பரிசோதித்துவிட்டு ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ஈசிஜி அனைத்தும் மிக சீராக உள்ளது எனக் கூறினர். இதை கேட்ட செல்வம் "இந்த மருத்துவமனையை விட புழல் சிறையே மேலானது, என்னை அங்கே கொண்டு செல்லுங்கள் என கூறி அனைவரையும் திக்குமுக்காட" வைத்தார். அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுக்கப்பட்ட செல்வம், பின்னர் காவலர்கள் புடைசூழ சுமார் 150 அடி தூரம் வரை நடந்து வந்து போலீஸ் வேனில் ஏறி ஜம்மென்று அமர்ந்து கொண்டு புழல் சிறைக்கு சென்றார். நீதிமன்ற வளாகத்தில் இருந்து இவை அனைத்தையும் கவனித்து வந்த ஒரு வழக்கறிஞர் இதைப்பற்றி கூறுகையில், செல்வம் ஹார்ட் அட்டாக் வந்தது போல "நாடகமாடி அனைத்து காவலர்களையும் விழிபிதுங்க செய்தார்". காவலர்களும் ரிமாண்ட்க்கு அழைத்துவந்த கைதிக்கு இப்படி ஆகிவிட்டதே என பதறி விட்டனர். "கடந்த வாய்தாவுக்கு வந்த செல்வம் இதே போலத் தான் அப்போதும் ACT கொடுத்தார்". செல்வத்திற்கு வெறும் கேஸ் ட்ரபிள் தான். இதை செல்வம் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காவல்துறையினரை கலங்கடித்து விட்டார் என உண்மையை போட்டு உடைத்தார். நீதிமன்ற வாசலில் செல்வம் மயங்கிய நிலையில் உள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. காவல்துறையினரின் அலட்சியத்தையும், அவர்களின் மனிதாபிமானத்தையும், செல்வத்தின் செயல்களையும் சகட்டுமேனிக்கு சமூக வலைத்தளத்தில் நெட்டிஷன்கள் பதிவிட்டு வருகின்றனர். எப்படி இருந்தாலும் ரிமாண்டுக்கு அழைத்து வந்த கைதிக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற துடிப்பிலும், மனிதாபிமான எண்ணத்துடனும் செல்வத்தை காப்பாற்ற பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் செயல்பட்டது மக்களுடைய பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended