• முகப்பு
  • district
  • பெரம்பலூர் மாவட்டம் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது – மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

பெரம்பலூர் மாவட்டம் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது – மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நடைபெற்று முடிந்த பதினோறாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இன்று (27.06.2022) வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் பெரம்பலுார் மாவட்டத்தின் மாணவ மாணவிகள் 95.56 சதவீதம் தேர்ச்சிபெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் பெருமிதம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பதினோறாம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை, பெரம்பலுார் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகள் என மொத்தம் 79 பள்ளிகளைச் சேர்ந்த 3,922 மாணவர்களும், 3,740 மாணவிகளும் என மொத்தம் 7,662 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர். இவர்களில் 3,671 மாணவர்களும், 3,651 மாணவிகளும் என மொத்தம் 7,322 மாணவ-மாணவிகள் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் . கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிகளவில் தேர்ச்சி சதவீதம் பெற உழைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள், நன்கு படித்து தேர்ச்சி பெற்றுள்ள மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளை எவ்வாறு நடத்த வேண்டும், மாணவ-மாணவிகளுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரையின் அடிப்படையிலும் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் அவ்வப்போது அரசுப்பள்ளிகளில் ஆய்வு செய்து வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையிலும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களும் அவ்வப்போது எங்களுக்கு வழங்கிய அறிவுரைகளை ஆசிரியர்கள் முறையாக பின்பற்றினார்கள். வாரந்தோறும் மாணவ மாணவிகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தி அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி கொடுத்ததே இந்த வெற்றிக்கு காரணம். இந்த வெற்றியை சாத்தியமாக்கிய பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கும், ஆசிரியப்பெருமக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்தார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடத்தையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ள பெரம்பலுார் மாவட்டம் தற்போது பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், முதன்மைக் கல்வி அலுவலரின் உதவியாளர்கள் திரு. முத்துக்குமார், ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்

VIDEOS

RELATED NEWS

Recommended