• முகப்பு
  • crime
  • காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லாததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லாததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு உள் மற்றும் புற நோயாளிகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் இடமாக விளங்குகின்றது. காஞ்சிபுரம் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர் . இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவமனையில் நிரந்தரமான மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும், ரெசிடென்ட்சியல் மெடிக்கல் ஆபீஸர் எனப்படும் நிலைய மருத்துவர் இல்லாததாலும் மருத்துவமனையில் பல வேலைகள் கேட்பாரற்று உள்ளது. அதனால் விலை உயர்ந்த உயிர்காக்கும் பல மருத்துவ உபகரணங்கள் திருடு போனது. மருத்துவமனை நிர்வாக கோளாறு காரணமாக நோயாளிகளுக்கு வழங்கப்படக் கூடிய அடிப்படை வசதியான குடிதண்ணீர் வழங்குவதில் மருத்துவமனை நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக நோயாளிகள் புலம்புகின்றனர். . 1.மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு, 2. மாத்திரைகள் வழங்கும் இடம் , 3. கோவிட் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி , 4. சமையல் அறை அருகே உள்ள குடிதண்ணீர், 5. குழந்தைகள் நலப்பிரிவு சிகிச்சை மையம் உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவிகளில் மூன்று இடத்தில் உள்ள கருவிகள் பழுதானதால் அங்கிருந்து அவை முற்றிலும் அகற்றப்பட்டது. இந் நிலையில் இரண்டு இடங்களில் இருந்து வந்து கொண்டிருந்த தண்ணீரும் நேற்றிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வராமல் நின்று விட்டது. இதனால் உள் மற்றும் புற நோயாளிகள் குடிக்கத் தண்ணீர் இன்றி மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட எந்திரங்கள் அவ்வப்போது பழுதாகி குடிநீர் விநியோகம் தடைபடுகிறது என நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அப்படி இருந்தும் நோயாளிகளுக்கு மிக அவசியமான அடிப்படை வசதிகளான குடிதண்ணீர் விநியோகம் செய்வது பற்றி மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தில் செயல்பட்டு வந்த புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரமும் கடந்த இரண்டு நாட்களாக பழுது ஏற்பட்டு அந்த வளாகத்தில் தங்கி உள்ள 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், பிரசவம் ஆன பெண்கள், அவர்களின் உறவினர்கள் என அனைவரும் தண்ணீரின்றி அல்லல்பட்டு வருகின்றனர் இதுமட்டுமல்லாமல் இந்த வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் குளிப்பதற்கும், கழிவறை சென்று கால் கழுவுவதற்கும் அவ்வப்போது தண்ணீரின்றி பெண் நோயாளிகள் மிகவும் துன்பப்படுகின்றனர். அதேபோல் கழிவறைகளும் சேதமடைந்து, சுகாதாரம் மற்றும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசு தலைமை மருத்துவமனையில், நிர்வாக கோளாறு காரணமாக, நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை வசதிகள் எதுவும் சமீபகாலமாக கிடைக்கவில்லை என நோயாளிகள் வேதனைப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அரசு தலைமை மருத்துவமனையில் இருந்த அனைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரங்களையும் சீர்படுத்தி குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended