• முகப்பு
  • அரசியல்
  • சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலும் புதுமைப் பெண் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - நாங்குநேரி எம்.எல்.ஏ. கோரிக்கை!

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலும் புதுமைப் பெண் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - நாங்குநேரி எம்.எல்.ஏ. கோரிக்கை!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 17, 2023, 7:09:58 PM

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக,  (மே.17) திருநெல்வேலிக்கு வருகை தந்த, தமிழக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் "செஞ்சி" கே.எஸ்.மஸ்தானிடம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான "ரூபி"ஆர்.மனோகரன், "கோரிக்கை மனு" ஒன்றை அளித்தார்.

அதில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது:- "சிறுபான்மையினர் நடத்திவரும் பள்ளிகளிலும் தமிழக அரசின், "புதுமைப் பெண்" திட்டத்தை செயல்படுத்த்திட வேண்டும்.

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கு, கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்த, நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகைகள், தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. 

இவற்றை, அவர்களுக்கு திரும்பவும் வழங்கிட வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகள், மருத்துவம் மற்றும் பொறியியற் படிப்புகள் படிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை, 15 சதவீதமாக உயர்த்தி, வழங்கிட வேண்டும்.

அதில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம், பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், விரிவுப்படுத்திட வேண்டும்.

மதிய உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும், செயல்பாட்டில் இருக்கிறது.

ஆனால், காலை சிற்றுண்டித் திட்டம், அரசு பள்ளிகளில் மட்டுமே, செயல்படுத்தப்படுகிறது.அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை, செயல் படுத்திட வேண்டும்.

கடந்த 16 ஆண்டுகளாக, 1- ஆம் வகுப்பு முதல், 8- ஆம் வகுப்பு வரை படிக்கும்,

சிறுபான்மையின மாணவ, மாணவி களுக்கு, ஒன்றிய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டு உள்ளது.

எனவே, மீண்டும் சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வித் தொகை கிடைத்திட, ஒன்றிய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மை பள்ளிகளில், தகுதியான காலி இடங்களில், விதிமுறைகளை பின்பற்றி, முறைப்படி பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணிநியமனத்துக்கு, கடந்த 6 ஆண்டுகளாக அரசால், ஒப்புதல் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக, ஊதியம் பெறாமலே, அவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் நியமன ஆணைக்கான ஒப்புதல் வழங்கி, அவர்களுக்கு சம்பளம் கிடைத்திட, உசவிட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவது போல், சிறுபான்மை பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், வழங்கிட வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டம் 2009- என்பதின் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிளுக்கு, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அவர்களுக்கு உரிய கல்விக் கட்டணத்தை, அரசே செலுத்துகிறது. இச்சட்டத்திற்கு, தமிழக அரசு விதிவிலக்குக் கோரி, சட்டமன்றத்தில் "தனி தீர்மானம்" நிறைவேற்றிட வேண்டும்.

சிறுபான்மைப் பள்ளிகளுக்கு, கற்பித்தல் மானியத்தில் 6 சதவீதம் வரை, பராமரிப்பு மானியம் முன்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது குறைக்கப்பட்டு, 0.5 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதனை மீண்டும், முன்பு இருந்தது போல 6 சதவீதமாக, உயர்த்தி வழங்கிட வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்ப தொடங்கப்பட்ட, சிறுபான்மை பள்ளிகளுக்கு கூட, நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படாமல், தொடர் அங்கீகாரம் என்கிற பெயரில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தற்காலிக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த விதிமுறை கைவிட்டு விட்டு, நிரந்தர அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.

சிறுபான்மை பள்ளிகளில் கட்டிட உறுதி சான்று, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், தீயணைப்பு மற்றும் சுகாதாரச் சான்று ஆண்டுக்கு ஒருமுறையும், அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியது இருக்கிறது. இந்த மூன்று சான்றிதழ்களையும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சமர்ப்பித்தார் போதும்! என்று,தளர்வு வழங்க வேண்டும்!"-

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில், நாங்குநேரி எம்.எல்.ஏ."ரூபி" ஆர்.மனோகரன் குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் மஸ்தான், முதலமைச்சருடன் கலந்து பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended