முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் வேதனை.

கோபிநாத்

UPDATED: Mar 31, 2023, 1:53:19 PM

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், அய்யம்பாளையம், மாம்பாறை, எல்லப்பட்டி, சின்னக்காம்பட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் செடி முருங்கை மற்றும் மரமுருங்கை சாகுபடி நடந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, முருங்கைக்காய்க்கு நல்ல விலை கிடைத்தது. இதனால் முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது முருங்கைக்காய்கள் அறுவடை பணி நடந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படுகிற முருங்கைக்காய்கள் மார்க்கம்பட்டியில் உள்ள மார்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கு முருங்கைக்காய்கள் செல்கின்றன. இதேபோல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் முருங்கைக்காய்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது முருங்கைக்காய் சீசன் தொடங்கியதையடுத்து, மார்க்கம்பட்டி மார்க்கெட்டுக்கு உள்ளூர் முருங்கைக்காய்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 100-க்கு குறையாமல் விற்பனையானது. ஆனால் நேற்று ஒரு கிலோ மரமுருங்கைக்காய்கள் ரூ. 8-க் கும், செடி முருங்கைக்காய்கள் ரூ. 15-க்கும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

இந்த விலை விழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காய் பறிப்பு கூலி கூட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டம் அடைந்து முடங்கி போய் உள்ளனர்.

இதேநிலை நீடித்தால், முருங்கைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கும் நிலை ஏற்படும் என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

எனவே மார்க்கம்பட்டியில் முருங்கை பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் முருங்கைக்காய்களை பவுடராக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended