• முகப்பு
  • aanmegam
  • மேலப்பாளையம் பசீர் அப்பா தர்கா கந்துாரி உரூஸ் பெருவிழா!

மேலப்பாளையம் பசீர் அப்பா தர்கா கந்துாரி உரூஸ் பெருவிழா!

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 12, 2023, 5:04:58 PM

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், 225- ஆண்டுகள் பழைமை வாய்ந்த, "ஞான மாமேதை' மகான் பஷீர் அப்பா ஒலியுல்லா தர்காவின், 228-வது ஆண்டு, கந்தூரி உரூஸ் பெருவிழா, இன்று (பிப்ரவரி.12) அதிகாலை வரையிலும், சிறப்பாக நடைபெற்று நிறைவுபெற்றது. தென் மாவட்டங்களில்,மிகவும் பிரசித்தி பெற்ற, திருநெல்வேலி, மேலப்பாளையம் "ஞானமாமேதை" ஆசிகே ரசூல் முகையித்தீன் பசீர் அப்பா ஒலியுல்லா தர்காவில், ஆண்டு தோறும் இஸ்லாமிய மாதம், ரஜப் பிறை 19 அன்று, கந்தூரி உரூஸ் பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும், வழக்கம் போல, பசீர் அப்பா தர்காவின், 228-வது ஆண்டு கந்தூரி உரூஸ் பெருவிழா நேற்று (பிப்ரவரி.11) அதிகாலை தொடங்கியது. தொடர்ந்து, சுபுஹு தொழுகையில், குர்ஆன் சரீப் ஓதப்பட்டு, விழா நிகழ்வுகள் தொடங்கின. மாலையில் தாயிரா, தப்ஸ் இசை முழங்க, மணமிகு வண்ண மலர்களால் சுற்றப்பட்ட சந்தனக்குடம்,பூலிப் புதுத்தெரு, பசீர் அப்பாதெரு வழியாக, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பசீர் அப்பா தர்காவை, வந்தடைந்தது. அங்கு தர்காவின், ஆஸ்தான 5- வது கலீபா டி.ஓ. அபுபக்கர் சாகிபு காதிரிய்யுல் ஜிஸ்தி தலைமையில், பசீர் அப்பா பரம்பரை கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, துஆ இறைஞ்சுதல் செய்யப்பட்டு, நேர்ச்சை விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, துணை கலீபா ஹாஜி எஸ்.எம்.எஸ். முத்துவாப்பா, மேலப்பாளையம் கல்வத்து தைக்கா மற்றும் மற்றும் யஹ்யா மவுலானா ஜும்ஆ பள்ளிவாசல் முத்தவல்லி கே.எம்.எஸ். முத்துவாப்பா என்ற சதக் அப்துல் அமீது ஆகியோர் முன்னிலையில், பசீர் அப்பா ரவுலா சரீப் மீது, புனித சந்தனம் பூசப்பட்டு, புனித போர்வை விரிக்கப்பட்டது தொடர்ந்து, மஜ்லிஸ் நடைபெற்றது. இதில் மகான் பசீர் அப்பா அருளிய ஞானப்பாடல்கள் பாடப்பட்டன. இறை திக்ரு நிகழ்வுகளுடன், கந்தூரி உரூஸ் பெரு விழா, இன்று (பிப்ரவரி.12) அதிகாலை, நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை தர்காவின் கலீபாக்கள் மற்றும் தர்காவின் டிரஸ்ட்டிகள், அக்தார்கள் உள்ளிட்டோர், மிகச்சிறப்பாக செய்து இருந்தனர். திருநெல்வேலி செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.

VIDEOS

RELATED NEWS

Recommended