நீலகிரியில் 150 தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு.

பிலிப்ராஜ் ரவி

UPDATED: May 31, 2023, 6:45:57 AM

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பு வட்டார போக்குவரத்துறை சார்பில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும்.

இதில், பள்ளிக்கூடத்தின் பெயர்,  தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி, முதலுதவி பெட்டிகள், வேக கட்டுப்பாட்டு கருவிகள், குழந்தைகள் ஏறும் வகையில் படிக்கட்டுகளின் உயரம்  உள்பட 21 வகையான அரசு  விதிமுறைகள் சரியாக இருக்கிறதா என சோதனை செய்யப்படும்.

இதன்படி, ஊட்டி அரசு கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது. 

ஒவ்வொரு வாகனமாக வட்டார போக்குவரத்து அதிகாரியும், வாகன ஆய்வாளரும் ஆய்வு செய்தனர். இந்த பணிகளை கலெக்டர் அம்ரித்  பார்வையிட்டார்.

363 வாகனங்கள் 

இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து சோதிக்கப்பட்டது. மேலும் அவசர கால வழி சரியாக செயல்படுகிறதா என்று சரிபார்க்கப்பட்டது.

பொதுவாக அனைத்து வாகனங்களும் ஊட்டியில் ஆய்வு செய்யப்படும். கோடை சீசன் காரணமாக ஏற்கனவே ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், கூடலூர், கோத்தகிரி என அந்தந்த பகுதிகளில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர் ஆகிய வட்டார போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த 363 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், நேற்று ஊட்டியில் 150 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

தமிழ்நாடு மோட்டார் வாகன பள்ளி பேருந்துகள் முறைப்படுத்துதல் மற்றும் சிறப்பு விதிகள் 2012-ன்படி ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.நீலகிரி மலை மாவட்டம் என்பதால் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது வாகனத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்ட வேண்டும், என்றார்.

18 வாகனங்கள் தகுதி நீக்கம்

இந்த ஆய்வில் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு  ஊட்டி நிலைய அலுவலர் பிரேமானந்தன் உத்தரவின் பேரில் அலுவலர் அன்பகன் தலைமையில் தீயணைப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

அப்போது சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளும் வழங்கப்பட்டது. மேலும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதேபோல் கண்காணிப்பு கேமரா சரியாக இல்லாத 15 வாகனங்கள், அதிக புகைத் தன்மை உள்ள ஒரு வாகனம், படிக்கட்டு சரியாக இல்லாததால் 2 வாகனங்கள் என 18 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், வாகன ஆய்வாளர் விஜயா, தாசில்தார் ராஜசேகர் உள்பட பலர் இருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended