• முகப்பு
  • அரசியல்
  • திருநெல்வேலி பாபனாசம் அணை, கன்னடியன் கால்வாயை, சொந்த நிதியில் தூர் வாரும், தமிழக முன்னாள் சட்ட அமைச்சர்!

திருநெல்வேலி பாபனாசம் அணை, கன்னடியன் கால்வாயை, சொந்த நிதியில் தூர் வாரும், தமிழக முன்னாள் சட்ட அமைச்சர்!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 30, 2023, 7:53:19 PM

திருநெல்வேலி மாவட்டத்தின், முதன்மையான அணைகளுள் ஒன்றான, "பாபனாசம்" அணையின் கீழ், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், மொத்தம் 11 கால்வாய்கள் அமைந்துள்ளன.

இவற்றுள் 4-வதாக கல்லிடைக்குறிச்சி முதல் கொத்தன்குளம் வரை, மொத்தம் 36 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைந்துள்ள கன்னடியன் கால்வாய் மூலம் அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி வட்டங்களில், மொத்தம் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள், இருபோக பாசனவசதி பெற்று வருகின்றன.

இந்த கன்னடி கால்வாய் முழுவதிலும், அமலைச்செடிகள், குப்பைக்கூளங்கள் மற்றும் சேறு- சகதிகள் நிறைந்து இருப்பதால், பாபனாசம் அணையில் இருந்து, சாகுபடி நேரங்களில் திறந்து விடப்படும் தண்ணீரானது, கடைமடை வரையிலும், போய்ச்சேருவதில்லை.

இதனை கருத்திற்கொண்டு, கன்னடியன் கால்வாயில் தூர்வாறும் பணியை, தன்னுடைய சொந்த நிதியில், தமிழக முன்னாள் சட்ட அமைச்சரும், அம்பாசமுத்திரம் தொகுதி, அ.தி.மு.க.சட்டமன்ற உறுப்பினருமான, "வழக்கறிஞர்" இசக்கி சுப்பையா, இன்று (மே.30) பத்தமடையில், முறைப்படி துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா கூறியதாவது:-

"அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி தாலுகா பகுதிகளில், விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் கன்னடியன் கால்வாய், பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருப்பதை கருத்திற்கொண்டு, தூர் வாரும் பணியை, என்னுடைய சொந்த செலவில் மேற்கொண்டுள்ளேன்.

சேரன்மகாதேவி மற்றும் வீரவநல்லூர் பகுதிகளிலும், தூர்வாரும் பணி தொடரும். கரைகளில் சிமெண்ட் தளம் அமைத்து, அவற்றை பலப்படுத்தும் நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ள வேண்டும். கார் பருவ சாகுபடிக்காக, வருகிற, ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து, பாபனாசம் அணையில் தண்ணீர் திறப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்"- இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, கூறினார்.

அப்போது, அ.தி.மு.க. நெல்லை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் ப.மாடசாமி, சேரன்மகாதேவி ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் மாரிச்செல்வம், சேரன்மகாதேவி பேரூராட்சி தலைவர் வி.சிவன் பாபு ஆகியோர், உடனிருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended