• முகப்பு
  • district
  • காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர், MLA கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர், MLA கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் இன்று (11.07.2022) கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.சி. ராஜேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்திய நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் 01.07.2022 அன்று 23 மாவட்டங்களுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வாகனத்தில் மிக துல்லியமாக நோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே, கணினி மற்றும் Artificial Intelligence எனப்படும் நோய் கண்டறியும் கணினி வசதி, குளிர்சாதனப் பெட்டி போன்ற சாதனங்கள் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும். இந்த வாகனம் மூலம் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே மூலம் நோய் கண்டறியப்படும். நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே சளி பரிசோதனை மேற்கொள்ளப்படும். சளி பரிசோதனையில் காச நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். மேலும், நோயாளியின் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும். நோயாளிகளுக்கு நோயின் தன்மை மற்றும் நோய் குணமாகும் வழிமுறைகள், நோய் தடுப்பு முறைகள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்படும். இவ்வாகனம் வாரத்தில் 5 நாட்கள் செயல்படும். இரண்டு வாரங்களுக்கு தொடர் இருமல், பசியின்மை, தொடர்ச்சியாக எடை குறைதல், சளியுடன் இரத்தம் வருதல் காச நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறி யுடையோர் இவ்வாகனத்தை அணுகி சளி பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த வாகனம் மூலம் காசநோய் இல்லா பெரம்பலூர் மற்றும் காசநோய் இல்லா தமிழகம் 2025 என்ற இலக்கினை அடைய உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக, காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் வாகனத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள், தலைமையில் அனைத்து அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். மேலும் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு கைப்பிரதியினை பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.அசோகன், துணை இயக்குநர் (காசநோய்) மரு.ஆர்.நெடுஞ்செழியன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.அர்ஜுனன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (காசநோய்) திரு.எ.புரட்சிதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்

VIDEOS

RELATED NEWS

Recommended