போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு முக சித்திரம் வரையும் போட்டி!

வாசுதேவன்

UPDATED: May 27, 2023, 7:02:47 PM

போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு முக சித்திரம் (Face Painting) வரையும் போட்டியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இடையேயான முக சித்திரம் (Face Painting) போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று (27.05.2023) நடைபெற்றது. 

இந்த விழிப்புணர்வு போட்டியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்து, தெரிவிக்கையில் -

மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையுடன் இணைந்து கன்னியாகுமரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் மாவட்டத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி மாணவ மாணவியரிடையே போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை,

உயர்கல்வித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அரசுத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதோடு, போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவ, மாணவியர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று பள்ளி, கல்லூரிகள் அளவில் மாணவ, மாணவியர்களுக்கிடையே முக சித்திரம் (Face Painting) வரையும் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், விஷாலா ஹிரேமத், காவல்துறை அலுவலர், போக்குவரத்துத்துறை அலுவலர், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended