• முகப்பு
  • cinema
  • சிந்தனையிலும், எண்ணத்திலும் உயர்ந்து நட்பிலும்-அழியாத கோலங்களாக திகழ்பவர்கள் பாலுமகேந்திரா-கமல்.

சிந்தனையிலும், எண்ணத்திலும் உயர்ந்து நட்பிலும்-அழியாத கோலங்களாக திகழ்பவர்கள் பாலுமகேந்திரா-கமல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 14, 2023, 2:08:46 PM

பாலுமகேந்திராவுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நேரம் அது. அவசரமாக பணம் தேவைப்பட்டது. யாரிடம் போய் கேட்பது ? கூச்ச சுபாவம் அதிகமுள்ள பாலுமகேந்திராவுக்கு ஒன்றும் புரியவில்லை. நீண்ட நேரம் சிந்தித்த பிறகு அவர் நினைவுக்கு வந்த பெயர்... கமல். ஏனெனில் கமலுக்கும் பாலுமகேந்திராவுக்கு இடையில் எப்போதுமே நெருக்கமான ஒரு நட்பு உண்டு. உடனே கமல் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டுவிட்டார் பாலுமகேந்திரா. உற்சாகமாக பாலுமகேந்திராவை வரவேற்று அமரச் சொன்னார் கமல். கூடவே அவரும் அருகில் அமர்ந்து கொண்டார். ஏனெனில் கமலுக்கும் பாலு மகேந்திராவை மிகவும் பிடிக்கும். பாலுமகேந்திரா, தான் பணம் கேட்க வந்திருக்கும் விஷயத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் முன்... உலக சினிமாக்கள் பற்றி சுவாரசியமாக பேச ஆரம்பித்தார் கமல். ஏனென்றால் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பாலுமகேந்திராவிடம்தான் பேச முடியும். பாலு மகேந்திராவும் அதே சுவாரஸ்யத்தோடு பேச... மணிக்கணக்கில் பேச்சு நீண்டு கொண்டே போனது. ஆனால் பாலுமகேந்திராவின் மனதுக்குள் எப்போது எப்படி பணத்தை கேட்பது என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் கமல் பேச்சை நிறுத்திவிட்டு கடிகாரத்தைப் பார்த்தார். "அடடே... பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. நான் ஷூட்டிங் போக வேண்டுமே..! கொஞ்சம் இருங்கள், வந்துவிடுகிறேன்." இப்படி சொல்லிவிட்டு எழுந்து மாடிக்குப் போய் விட்டாராம் கமல். பாலுமகேந்திரா என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துப் போய் அமர்ந்திருந்தார். ஷூட்டிங் புறப்படும் இந்த நேரத்தில் கமலிடம் பணம் கேட்பது நாகரீகமாக இருக்காது. சரி, தானும் புறப்பட வேண்டியதுதான். பணத்திற்கு வேறு யாரிடம் போய் நிற்பது என்ற சிந்தனையோடு எழுந்தார் பாலுமகேந்திரா. இந்த நேரத்தில் கமல் மாடியிலிருந்து விறு விறு என்று வேகமாக இறங்கி பாலுமகேந்திராவின் பக்கத்தில் வந்தார். கமலின் கையில் ஒரு கனத்த கவர் இருந்தது. "இந்தாங்க" என்று அதை பாலுமகேந்திராவிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தார் பாலுமகேந்திரா. அவர் எதிர்பார்த்ததைவிட அதிகமான தொகை அந்தக் கவருக்குள் இருந்தது. என்ன பேசுவது எனத் தெரியாமல் பாலுமகேந்திரா திகைத்து நிற்க, கமல் சொன்னாராம். "உங்களை எனக்குத் தெரியும் பாலு சார். இது கடன் இல்லை. அட்வான்ஸ். நம்ம ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிற அடுத்த படத்தை, நீங்கதான் டைரக்ட் பண்றீங்க. உற்சாகமா வேலையை ஆரம்பிங்க..." எதுவும் பேசாமல் கண்கள் பனிக்க கமலை கட்டி அணைத்துக்கொண்டார் பாலுமகேந்திரா. அப்படி கமலுக்கு பாலுமகேந்திரா இயக்கிய படம் தான் சதிலீலாவதி அழகான_நட்புகள்... அவை எப்போதுமே "அழியாத கோலங்கள்." சிறப்பு செய்தியாளர் : மாமுஜெயக்குமார்.

VIDEOS

RELATED NEWS

Recommended