• முகப்பு
  • tamilnadu
  • விரிசலில் ஓர் உறவு. எஸ்பியை மிரட்டிய எடப்பாடி!

விரிசலில் ஓர் உறவு. எஸ்பியை மிரட்டிய எடப்பாடி!

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 10, 2023, 7:52:56 AM

ஓபிஎஸ், இபிஎஸ் இல்லை! அந்த இருவர் யார்? அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜ புது சர்ச்சை. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இதையடுத்து, வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு பெருந்துறை ரோட்டில், வேப்பம்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், கருப்பணன், வேலுமணி, தங்கமணி, முனுசாமி, ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் 117 பேரும் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பாஜ தேசிய செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். வேட்பாளரை அறிமுகப்படுத்தி, எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவே உற்று கவனித்து வருகிறது. இந்த தேர்தலில் நாம் பெறும் வெற்றி தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றியாகும்' என்று தெரிவித்தார். பாஜ தேசிய செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'இருவரும் இருந்த போது தான் தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. இருவரும் இருந்த போது தான் தமிழகத்துக்கு நல்லது நடந்தது' என்று கூறினார். ஆனால், அந்த இருவர் யார்? என்று கடைசி வரை சொல்லவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் என்று பெயரை குறிப்பிடாமல் இருவர், இருவர் என பாஜ நிர்வாகி பேசியது அதிமுகவினரை கொதிப்படைய செய்து உள்ளது. அதிமுக தேர்தல் பணிமனையில் பாஜ கொடிக்கு எடப்பாடி தடை விதித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக பணிமனையில் பாஜ கொடியை கட்டாமல் நிர்வாகிகள் புறக்கணித்தனர். எடப்பாடி பழனிசாமி பேசும் போது, 'எங்கள் கூட்டத்துக்கு வருவோரைத் தடுத்து, அடைத்து வைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆட்சி மாறும், அப்போது காட்சியும் மாறும். அப்போது நீங்கள் இதற்கான எதிர்வினைகளை ஈரோடு மாவட்ட எஸ்பி நிச்சயம் சந்திக்க வேண்டி வரும்' என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். தி கிரேட் இந்தியா நியூஸிற்காக பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended