• முகப்பு
  • கல்வி
  • பள்ளி இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க 2 அடுக்கு கண்காணிப்பு குழு அமைப்பு!  

பள்ளி இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க 2 அடுக்கு கண்காணிப்பு குழு அமைப்பு!  

வாசுதேவன்

UPDATED: May 27, 2023, 7:11:45 PM

பெரணமல்லூர் பகுதியில் பள்ளி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் 2 அடுக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி மாணவர்களை ஊக்குவித்து வருகிறார். குறிப்பாக இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

பிடிஓ வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை, ஓ எஸ் சி ஒருங்கிணைப்பாளர் சரவணராஜ், தொழிலாளர் துறை அலுவலர் குபேரன் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு)ராஜா அனைவரையும் வரவேற்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய வட்டார கல்வி அலுவலர், பெரணமல்லூர் ஒன்றிய அளவில் 54பேர் பள்ளி இடைநின்ற மாணவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

அவர்களில் 7 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகிறார்கள். மேலும் விடுபட்ட 47 மாணவர்களை வரும் கல்வி ஆண்டில் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்போது தெரிவித்தார்.

மேலும் இடைநின்ற மாணவர்களை கண்காணித்து சேர்க்கவும், பள்ளி செல்ல குழந்தைகளை கண்காணிக்க 2 அடுக்கு கண்காணிப்பு குழு அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அந்த குழுவில் வட்டார கல்வி அலுவலர், பி டி ஓ, வட்டார வளமைய மேற்பார்வையாளர், பேரூராட்சி தலைவர், தொழிலாளர் துறை அலுவலர், ஓஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் அடங்கிய 6 பேர் இடம் பெறுவார்கள். 

இந்த குழுவினர் பள்ளி செல்ல குழந்தைகளை பள்ளி சேர்க்கவும், இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்த்து அவர்களை கண்காணிக்கவும் குறிப்பாக பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இந்த குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஆசிரிய பயிற்றுநர்கள் செண்பகவல்லி, விஜயலட்சுமி, மொளுகு, சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended