அம்பத்தூரில் மீண்டும் போதை மாத்திரைகள்.
நெல்சன் கென்னடி
UPDATED: May 29, 2024, 12:52:52 PM
சென்னை அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியில் வலி நிவாரணி மாத்திரைகள் போதைக்காக விற்பனை செய்யப்பட்டுவருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபர்களை நோட்டமிட்ட போலீசார், அவர்களிடம் சென்று பேச்சு கொடுத்த போது அவர்கள், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் அம்பத்தூர் ஐசிஎப் காலனியை சேர்ந்த அஜித் (21), திருமுல்லைவாயில் பகுதியில் சேர்ந்த சதீஷ் (18), அம்பத்தூர் மண்ணூர்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன், அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த லிங்கேஷ் (18), அம்பத்தூர் இந்திரா நகர் பகுதியில் சேர்ந்த தனுஷ் (21), அம்பத்தூர் சோழபுரத்தை சேர்ந்த யோகராஜ் (21) என்பதும்,
அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், வட மாநில வாலிபர்களுக்கு நைட்ரோவிட் என்றழைக்ககூடிய போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த 2 லட்சம் மதிப்புடைய 1800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
அம்பத்தூர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 1140 நைட்ரோவிட் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 300 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது மேலும் 1800 நைட்ரோவிட் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தொடர்ந்து போதை மாத்திரைகள் குட்கா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து வரும் நிலையில், போலீசாரின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.