- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் கேரளாவுக்கு 18 லாரிகளில் திருப்பி அனுப்பப்பட்ட வரலாற்று சம்பவம்.
திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் கேரளாவுக்கு 18 லாரிகளில் திருப்பி அனுப்பப்பட்ட வரலாற்று சம்பவம்.
பால முருகன்
UPDATED: Dec 23, 2024, 6:26:06 AM
திருநெல்வேலி
நெல்லை அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் டன் கணக்கில் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மனோகர் (51), மாயாண்டி (42) ஆகியோர் டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை மூன்று நாட்களுக்குள் அகற்ற கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் பணிகள் நேற்று (டிசம்பர் 22) ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திலிருந்து உதவி ஆட்சியர் சாச்சி, கேரள சுகாதாரத்துறை அலுவலர் கோபக்குமார் உட்பட 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நெல்லை வந்தனர்.
இதனையடுத்து, நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் உள்பட 6 இடங்களில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் 8 பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு 18 லாரிகளில் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து மாவட்ட காவல் துறை சாா்பில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. காலை 7.30 மணி முதல் மாலை வரை கழிவுகளை லாரிகளில் ஏற்றும் பணி நடைபெற்றது. பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக - கேரளா எல்கையான தென்காசி மாவட்டம் புளியரை செக் போஸ்ட் வழியாக லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள கழிவுகள்
தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக கழிவுகள் அகற்றப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை வரலாற்று சம்பவமாக தென் மாவட்ட மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், தமிழிக அரசின் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனை சாவடிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டு சோதனை சாவடிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டது. இம்மாவட்ட பகுதியில் கழிவுகளைக் கொட்டுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.