மோடிக்கு எதிராக விவசாயிகள் போட்டியிட்டால் விளம்பரமா ?

JK

UPDATED: May 21, 2024, 9:38:44 AM

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த தேர்தலில் விவசாயிகளுக்கு அறிவித்த எந்த திட்டத்தையும் மோடி செயல்படுத்தவில்லை என கண்டனம் தெரிவித்து வாரணாசியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து போட்டியிடுவதற்காக 111 விவசாயிகள் திருச்சியில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டனர்.

ஆனால் அவர்களை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் இறக்கி விட்டனர். எனவே அங்கிருந்து திரும்பி திருச்சிக்கு வந்தனர். 

இதனைத் தொடர்ந்து நாளை சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது போலீஸ் அதை தடுக்கும் பட்சத்தில் தலைமை செயலகத்திற்கு முன்பு போராடுவது என நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில் :

இந்திய நாடு ஒரு ஜனநாயக நாடு கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை குடிமக்கள் தேர்தலில் நிற்கலாம். மோடி குஜராத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் காசியில் போட்டியிடுகிறார்.

இதேபோல் ராகுல் காந்தி டெல்லியை சேர்ந்தவர் ஆனால் அவர் 2000 கிலோ மீட்டர் தள்ளி உள்ள கேரளாவில் போட்டியிடுகிறார்.

மோடி போட்டியிடும் அதே வாரணாசியில் 111 விவசாயிகள் நாங்கள் போட்டியிடுவதற்கு சென்றால் எங்களை போக்கூடாது என தடுத்து நிறுத்துகிறார்கள்.

மோடி நான் பிரதமர் ஆனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பான விலையை தருவேன் 18 ரூபாய் விற்ற நெல்லுக்கு 54 ரூபாய் தருவதாக கூறிவிட்டு தற்போது வெறும 22ரூபாய் தருகிறார். 

2700 விற்ற கரும்புக்கு 8000 ரூபாய் தருவதாக கூறிவிட்டு 3150ரூபாய் தருகிறார். 

லாபகரமான விலை எந்த முதலமைச்சராலும் வழங்க முடியாது,தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றால் அது மத்திய சர்க்கார் தான் செய்ய வேண்டும். முதலமைச்சருக்கு அதிகாரம் கிடையாது.

வருஷத்துக்கு 1330கோதாவரி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. அந்தத் தண்ணீரை தமிழகத்திற்கு திருப்பிட வேண்டும் என்றாலும் மத்திய அரசுதான் அதை திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

விவசாயத்துக்கு மாதம் 500ரூபாய் பென்ஷன் வழங்குகிறார்கள். ஆனால் 5000 தரவேண்டும் என்பதற்காக போராடச் சென்றால் தடுத்து நிறுத்துகிறார்கள். டெல்லிக்கு தான் அனுமதி இல்லை, வாரணாசிக்கு அனுமதி இல்லை இது குறித்து காவல்துறையினருக்கு கடிதம் எழுதினாலும் விவசாயிகளை பிச்சைக்காரர்கள், அடிமைகள் போல பார்க்கிறார்கள் எந்த பதிலும் அவர்கள் தருவதில்லை.

எனவே, எங்களை கைது செய்தாலும் பரவாயில்லை வருகிற 22ஆம் தேதி (நாளை)முதல் 30ஆம் தேதி வரை தொடர்ந்து சென்னையில் உள்ள சாஸ்திரி பவன் முன்பாக அங்கு தடுத்தால் தலைமைச் செயலகம் முன்பாக தொடர் உண்ணாவிரத்தை விவசாயிகள் முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும், நீங்கள் முன்னெடுக்கும் மோடி எதிர்த்து போட்டி என்பது என்பது விளம்பரத்திற்காக என்ற உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது என்ற கேள்விக்கு ?

தமிழகத்தில் போட்டியிடாமல் ஏன் வாரணாசிக்கு வருகிறேன் என்று கேட்கிறார்கள்.

ஏன், மோடி குஜராத்தில் போட்டியிடாமல் வாரணாசி வருகிறார், ஏன் ராகுல் காந்தி டெல்லியில் போட்டியிடாமல் கேரளா வருகிறார் விளம்பரத்திற்காகவா விவசாயிகள் போனால் அது விளம்பரமா? அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended