• முகப்பு
  • கல்வி
  • கல்வித் துறை தொடர்பான மலையகத்திற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

கல்வித் துறை தொடர்பான மலையகத்திற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

கண்டி - ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Jul 8, 2024, 4:35:59 PM

புதிய கல்வித்திட்ட மாற்றங்களின் போது மலையக தமிழ் மாணவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியரும், தேசிய மக்கள் சக்தியின் தேசியமட்ட மத்திய குழு உறுப்பினருமான அமரகீர்த்தி லியனகே தெரிவித்தா்ர. 

கண்டி டெவோன் ஹோட்டலில் இடம் பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக என்.பீ.பீ.இன் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக இக்கலந்துரையாடல் கண்டியிலுள்ள புத்தி ஜிவிகளால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

அதில் அவர் மேலும் தெரிவித்தாவது-

பேராதனைப் பல்கலைக்கழக வேலியில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களின் பிள்ளைகளுக்குக் கூட பல்கலைக் கழகப் பிரவேசம் ஒரு கேள்விக் குறியாக உள்ளது. ஆனால் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு இருப்பது ஒரே ஒரு கதவுதான். அதன் ஊடகத்தான் சகலரும் பிரவேசிக்க வேண்டும்.

சிங்கள மாணவர்களுக்கு உள்ள அதே உரிமைகள் இருந்த போதும் பெருந்தோட்ட மக்களுக்கு அல்லது மலையக மக்களுக்கு அதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே பல்கலைக்கழக பிரவேசம் மட்டுமல்ல ஏனைய கல்வித் துறை தொடர்பான விடயங்களில் மலையக சமூகத்திற்கு விசேட ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும். அதாவது குறைந்த வெட்டுப் புள்ளி போன்ற விடயங்களைக் கையாள முடியும் என்றார்.

இங்கு உரையாற்றி தேசிய மக்கள் சக்தியின் தேசியமட்ட மத்திய குழு உறுப்பினருமான கலாநிதி பீ.பீ. சிவப்பிரகாசம் தெரிவித்ததாவது-

 ஜே.வி.பி. என்ற விருட்சத்தின் ஒரு கிளையாகவே என்.பி.பி. உள்ளது. அதுவும் இப்போதுள்ள ஜே.வி.பி. முன்னைய ஜேவி.பி. அல்ல. வித்தியாசமானது.  

இன்று ஒரு தேர்தலை எதிர் பார்த்துள்ள மக்கள் வெறுமனே உறுப்பினர் தலையை மாற்றும் ஒரு அரசியலை எதிர்பார்க்கவில்லை. அரசியலை நடை முறைப்படுத்துவதில் முழுமையான மாற்றம் உள்ள ஒரு அமைப்பையே எதிர் பாரத்துள்ளனர். அந்த வகையில் என்.பி.பி. பொதுமக்கள் மத்தியில் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறது.

தமிழ் மக்களது பிரச்சினை எனும் போது மலையக மக்களின் பிரச்சினைகளை நாம் இன்று முன்னிலைப்படுத்தி கலந்துரையாடி வருகிறோம். 

இது விடயமாக நாம் என்.பி.பி உடன் இரண்டு வருடங்களுக்கு முன்பே பேச்சு வாரத்தை நடத்தி வந்தோம். அண்மையில் ஹட்டனில் வௌியிடப்பட்ட ஹட்டன் பிரகடத்திலும் சில விடயங்கள் முன் வைக்கப்பட்டன.

இலங்கையில் எந்த ஒரு தேசிய மட்ட அரசியல் கட்சியும் 'மலையகம்' என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்த வில்லை. ஆனால் என்.பி.பி. நாடலாவிய ரிதியில் மத்திய மலைநாட்டு தமிழர்களது விடயங்களைக் கையாளும் போது 'மலையகம்' என்ற வார்த்தையைப் பயன் படுத்துகிறது. 

மலையக மக்களது பிரச்சினைகளை மலையக மக்கள் தான் முன்வைக்க வேண்டும். மற்றவர்களுக்கு அதன் வலி புரியாது. 

நுவரெலியா மாவட்டத்தில் 1ஏ.பி. தரத்தில் (உயர் தரம்) சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் 17 உள்ளன. தமிழ் மொழி பாடசாலைகள் 9 உள்ளன. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இதில் வித்தியாசம் புரியாது. ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் சிங்கள சனத் தொகை 42 வீதமும், தமிழர் சனத் தொகை 58 வீதமும் உள்ளதன. அதாவது தமிழ் மக்கள் அதிகம். உயர்தர வகுப்புள்ள பாடசாலையின் விகிதம் 17 ற்கு 09 ஆக குறைந்து காணப்படுகிறது. ஆனால் சமசந்தர்ப்பம், சமவாய்ப்பு என்ற விடயங்கள் கேள்விக்குறியாக உள்ளது. 

எனவே இலங்கையில் அரசியல் கலசாரம் மாற்றப்பட வேண்டும். அதற்காகவே என்.பீ.பீ. பாடுபடுகிறது என்றார்.  

இக்கலந்துரையாடலில் பார்த்தீபன்(திகன), செந்தில் சிவஞானம் (குருனாகல்), சட்டத்தரணி ஏ.செல்வராஜ் (ஹட்டன்), காஞ்சனா நடராஜா(கண்டி), சிவலிங்கம் (பலகொல்ல) உற்பட இன்னும் பலர் கருத்து வௌியிட்டனர்.

 

VIDEOS

Recommended