பேருவளை பிரதேசத்திலுள்ள முஸ்லிம், சிங்கள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புலமை பரிசில்
பேருவளை பீ.எம் முக்தார்
UPDATED: Dec 16, 2024, 3:53:21 PM
பேருவளை பிரதேசத்திலுள்ள 06 முஸ்லிம், சிங்கள பாடசாலைகளில் கல்வி பயிலும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு தமது கல்வியை இடையூறுன்றி தொடர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு 16ஆம் திகதி திங்கட்கிழமை (2024-12-16) மாலை பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
பேருவளை அப்ரார் கல்வி நிலையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
அப்ரார் கல்வி நிலைய ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தலைவர் அல்-ஹாஜ் முஹம்மத் நிஸாம் (ஜே.பி) தலைமை வகித்தார்.
பாகிஸ்தான் நாட்டின் இலங்கை உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பஹீமும் அஸீஸ் பிரதம அதிதியாகவும், கட்டார் செரட்டி இலங்கை பணிப்பாளர் முஹம்மத் அபூ கலீபா கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர். மேற்படி, கல்வி நிலைய செயலாளர் கலாநிதி. மெளலவி எம் அஸ்வர் அஸாஹிம் (அல்-அஸ்ஹரி) வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில், பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், பாஸியத்துல் நஸ்ரியா ஆண்கள் பாடசாலை, மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயம், மஹகொடை ஐ.எல்.எம் ஸம்ஸுதீன் மகா வித்தியாலயம், மஸ்ஸல பெளத்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய ஆறு பாடசாலைகளில் கல்வி பயிலும் 50 வறிய மாணவர்களுக்கு இதன் போது புலமைப்பரிசில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், அப்ரார் கல்வி நிலையத்தின் பணிகளை பாராட்டி நினைவுச்சின்னமொன்றையும் வழங்கினார்.
அல்-பாஸியத்துல் நஸ்ரியா பாடசாலை பழைய மாணவியும் தற்போது அரசாங்க நிர்வாக சேவையில் உயர் பதவி வகித்து மருதானை மண்ணுக்கு புகழ் சேர்த்துள்ள பாத்திமா சப்ரா ராஜிக்கும் அப்ரார் கல்வி நிலையத்தின் மூலம் நிறைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நெருக்கமான உறவுகளை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தமது உரையில் ஞாபக மூட்டினார்.
பாகிஸ்தான் மிக நீண்ட காலமாக இலங்கை மாணவர்களுக்கு மருத்துவத்துறை உட்பட, மேலும் சில துறைகளில் உயர் கல்வியை தொடர புலமைப் பரிசில் வழங்கி வருவதாகவும், இதனால் இலஙாகை மாணவர்கள் நன்மை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிபர் மஸ்னவியா புர்கான் உரையாற்றும் போது இலங்கையில் முதலாவது முஸ்லிம் மகளிர் கல்லூரியான இப்பாடசாலை தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதாகவும், பாடசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிகழ்வி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இப்பாடசாலை முனேற்றத்தில், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் காட்டி வரும் ஆர்வம் குறித்தும் நன்றி தெரிவித்தார்.
ALSO READ | ராஜினாமா ஏன்? - ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம்
நிகழ்வில் விஷேட அதிதிகளாக தொழிலதிபர் அல்-ஹாஜ் எம்.ஆர் மொஹிதீன் ஏ. காதர் (Trustee Muslim Hand), எம்.ஆர் அஸாமர் முஹம்மத் மிஹ்லார் (Country Director Muslim Hand to Sri Lanka), எம்.ஆர் ஆஸிப் மஹ்மூத் (Heqd of Programmes, Muslim Hand), நாதியா ரஸா (Scholorship Programme Lead - UK) ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், பேருவளை நகரசபை முன்னாள் உப தலைவர் அல்-ஹாஜ் ஹஸன் பாஸி, இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வர் பாதில் பாக்கீர் மாக்கார், கல்வி நிலைய பொருளாளர் ஹலீம் ஏ. அஸீஸ், பாடசாலைகளினதும் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், உலமாக்கள், கல்விமான்கள், பாடசாலை சங்க உறுப்பினர்கள், அப்ரார் கல்வி நிலைய முக்கியஸ்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி கல்வி நிலையம் பரோபகாரிகள், பிரதேச தனவந்தர்களின் நிதி உதவியுடன் கடந்த 10 வருடங்களாக பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மூவின மாணவர்களுக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி தமது கல்வியை இடையூறுன்றி தொடர புலமைப் பரிசில் வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அப்ரார் கல்வி நிலையத்தின் மூலம் புலமைப் பரிசில் பெற்று கல்வியை பூர்த்தி செய்து தொழில்களை பெறுபவர்கள் கூட இன்று புலமைப் பரிசில் திட்டத்திற்கு உதவி செய்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த கல்வி நிலையம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இப்பணியை செவ்வனே மேற்கொண்டு வருவதனாலும் இதன் மூலம் புலமைப் பரிசில் பெற்ற மாணவர்கள் தேசிய பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்து, வருகின்றமையினாலும் தனவந்தர்கள், பரோபகாரிகள் உதவிக் கரம் நீட்டியும் வருகின்றனர்.