• முகப்பு
  • கல்வி
  • ஒரு சமூகத்தின் நிலைபேறான அபிவிருத்தி கல்வியில் தங்கியுள்ளது -ஏ.ஸீ அகார் முஹம்மத்

ஒரு சமூகத்தின் நிலைபேறான அபிவிருத்தி கல்வியில் தங்கியுள்ளது -ஏ.ஸீ அகார் முஹம்மத்

பேருவளை பீ.எம் முக்தார்

UPDATED: Dec 19, 2024, 5:54:47 AM

ஒரு சமூகத்தின் நிலைபேறான அபிவிருத்தி கல்வியில் தான் தங்கியுள்ளது. அத்துடன் சமூகத்தின் உயர்வுக்கும், மேம்பாட்டுக்கும் கல்விச் செல்வமே மிகவும் இன்றியமையாத சொத்தாகும்.

கல்வி இல்லாத சமூகத்தால் இன்றைய உலக சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது. அந்த வகையில் இன்று இடம் பெறும் கல்வியலாளரை கெளரவிக்கும் இந்த நிகழ்வானது, மிகவும் வரவேற்கத்தக்க ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்று ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வரும், இந்த விழாவின் பிரதம அதிதியுமான அஷ்ஷெய்ஹ். ஏ.ஸீ அகார் முஹம்மத் (நளீமி) கூறினார்.

சீனன்கோட்டை ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளரும், பேருவளை மண்ணின் மைந்தருமான அஷ்ஷெய்ஹ். கலாநிதி. அரபாத் கரீம் (நளீமி) அவர்களுக்கு மலேசியா இஸ்லாமிய சர்வகலாசாலை அண்மையில் இஸ்லாமிய சட்டத்துறைக்கான கலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. 

original/dofoto_20241219_104323166_copy_819x655
மேற்படி, பட்டம் பெற்ற அரபாத் கரீமை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வொன்றை பேருவளை, சீனன்கோட்டை ஜாமியத்துல் மனாரத் எனும் மகளிர் அமைப்பு, நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி பாக்கிர் மாக்கார் மண்டபத்தில் நடாத்தியது.

மேற்படி, மகளிர் அமைப்பின் தலைவி பஸ்லா ஸினான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சீனன்கோட்டை பள்ளிச் சங்க தலைவர் ஏ.எச்.எம் முக்தார் ஹாஜியார், அதிபர் பஹீமா பாயிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

அகார் முஹம்மத் தொடர்ந்து கூறியதாவது,

இன்று கல்வியாளர்கள், புத்திஜீவிகள் கெளரவிக்கப்படுவது, பாராட்டப்படுவது மிகமிக அரிதான நிகழ்வாக உள்ளது. பதிலுக்கு விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பாடகர்கள், தனவந்தர்கள் சர்வசாதாரணமாக பாராட்டி கெளரவிக்கப்படுகிறார்கள். குறிப்பாக அரசியல்வாதிகள் மிகவும் பலமாக பாராட்டப்படுவதைக் காண்கிறோம். ஆனால், கல்வித்துறையில் உயர் பட்டம், பதவிகள் பெறுவோர் எமது மக்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை.


இந்த பாராட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக என்னை அழைக்கப்படட் போது, இது ஒரு முக்கியமான காத்திரமாக, தார்மீக கடப்பாடுடைய பணி என்பதால் குறுகிய கால அவகாசத்திலும் உடன்பாடு தெரிவித்து இன்று கலந்து கொண்டேன். 

இந்த வைபவம் எனக்கு பல மடங்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இவர் இந்த மண்ணின் மைந்தன் என்பது ஒரு புறம். மறுபுறத்தில் எமது ஜாமியா நளீமிய்யாவின் மைந்தன் என்பது என்னை இரட்டிப்பு மகிழ்ச்சியடைய வைக்கிறது.

பேருவளை மண் மாணிக்கக் கல் வர்த்தகத்திற்கு பேரும், புகழும் பெற்றுள்ளது போல் கல்விக்கும் உயிர் கொடுக்கும் ஒரு பிரதேசமாக இன்று விளங்குவதைக் கண்டு மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.

இஷ்லாமிய மறுமலர்ச்சி இயக்க ஸ்தாபகரும், ஜாமியா நளீமிய்யா ஸ்தாபகரும், பிரபல கொடை வள்ளலுமான மர்ஹும் நளீம் ஹாஜியார் பிறந்த இந்த மண் மாணிகாக வர்த்தகத்தாலும், கல்வி உயர்வாலும் இன்று பெருமை அடைந்து கொண்டிருக்கிறது.

உலகில் உள்ள எல்லாச் செல்வங்களிலும் கல்விச் செல்வமே மிகவும் உயர்ந்து நிற்கிறது. அதற்கு அடுத்தபடியாகவே பொருள் செல்வம் உள்ளது.

இறை தூதர்களிடம் காணப்பட்டது, கல்விச் செல்வம்தான். அரசர்களிடம் காணப்படுவது பொருள் செல்வம். இதன் மூலம் கல்விச் செல்வம் எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

original/img_20241218_232445
ALSO READ | திருச்சி நீதிமன்றத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் ஆஜர்.

கல்வி அறிவுதான் ஒரு மனிதனை தூய்மைப்படுத்துகிறது. இன்று அறிவியல்மய உலகம். எனவே நிகழ்கால, வருங்கால சந்ததியினர்களுக்கு இயன்றவரை கல்விச் செல்வத்தை ஊட்ட வேண்டும்.

கற்றவனிடம் ஆறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. விவேகம், மேலும் அறிவைத் தேடும் ஆர்வம், விடா முயற்சி, நல்லாசானின் வழிகாட்டல், வாழ்வாதாரம், நீண்ட கால உழைப்பு. இவை எல்லாம் இன்று கெளரவிக்கப்படும் அரபாத் கரீமிடம் காணப்படுவதை நான் 4-5 தசாப்தங்களாக அவருடன் நெருங்கிப் பழகுபவன் என்பதனால் கண்டு கொண்டுள்ளேன்.

இந்த விழா எதிர்கால எமது சந்ததிகளின் உயர்வுக்கும், விழிப்புணர்வுக்கும் கால் கோளாக அமையும் என்பதில் ஐயமில்லை என்றார்.

கலாநிதி அஷ்ஷெய்ஹ். அரபாத் கரீம் (நளீமி) யை கெளரவித்து அமைப்பின் சார்பில் நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

சீனன்கோட்டை ஆரம்ப பாடசாலை பிரதி அதிபர் முர்ஷிதா ஸஹில், பாத்திமா றிஸ்மா ரிழ்வான், பாத்திமா பஸ்னா மசூர் ஆகியோர் உரையாற்றியதோடு, ஆசிரியை நுஸ்ரத் நிஸாம் நன்றியுரை வழங்கினார். இளம் கவிஞர் ஷஹாமா ஸனீர் கவிதை பாடி சபையோரை மகிழ்வித்தார்.

இந்த விழாவை ஏற்பாடு செய்தமைக்காக கலாநிதி. அஷ்ஷெய்ஹ். அரபாத் கரீம் (நளீமி) அல்-மனாரத் மகளிர் அமைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

கலீபதுஷ்ஷாதுலி மெளலவி எம்.எம் ஸெய்னுலாப்தீன் (பஹ்ஜி), சீனன்கோட்டை பள்ளிச் சங்க உப தலைவர் அஷ்ஷெய்ஹ். எம்.எஸ்.எம் றிழ்வான் (நளீமி), இணைச் செயலாளர் எம்.எம்.எம் சிஹாப் ஹாஜியார், இணைப் பொருளாளர் அல்-ஹாஜ் எம்.எம்.எம் ஹில்மி, உறுப்பினர் அல்-ஹாஜ் தஹ்லான் மன்ஸுர், ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ். எஸ்.எச்.எம் பளீல் (நளீமி) உட்பட கலாபீட விரிவுரையாளர்கள், சீனன்கோட்டை ஸகாத் கமிட்டி தலைவர் ஏ.ஐ.எம் பாக்கிர் ஹாஜியார், சீனன்கோட்டை பவுண்டேசன் உறுப்பினர்கள், சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர் சங்க உறுப்பினர்கள், பேருவளை பிராந்திய எழுத்தாளர் சங்க தலைவர் ரபீஸ் ஹம்ஸா உட்பட உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், உலமாக்கள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended