மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவ மாணவர் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை.
செந்தில் முருகன்
UPDATED: May 6, 2024, 2:48:47 PM
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமுதாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இச்சமுதாய மாணவர்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்புக்கு உள்ளேயே நீடு அறக்கட்டளை சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி அமைக்கப்பட்டு, நரிக்குறவ சமுதாய மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்புவரை இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பின்னர் கல்வியை தொடர மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் தங்கியுள்ளவர்களில் இதுவரை 23 மாணவ-மாணவிகள் பட்டப்படிப்பை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்துமுடிந்த பிளஸ்2 தேர்வில் இந்த நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த வீரசிவாஜி என்ற ஒரு மாணவர் மட்டும் தேர்வெழுதியிருந்த நிலையில், அவர் 303 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தருமபுரம் ஆதீன மேல்நிலைப்பள்ளியில் பயின்று பிளஸ்2 தேர்வெழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்த மாணவருக்கு பல்லவராயன்பேட்டையில் உள்ள உண்டுஉறைவிடப் பள்ளியில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
சட்டக்கல்லூரியில் பயின்று வழக்கறிஞராக ஆவதே தனது லட்சியம் என மாணவர் வீரசிவாஜி தெரிவித்துள்ளார்.