கணவனை இழந்து மறு திருமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்யும் பெண்களை குறி வைத்து நகை பறித்த நபர் கைது.
முருகன்
UPDATED: Jun 4, 2024, 2:59:03 AM
கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி(45), இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன நிலையில் மறு திருமணம் செய்வதற்காக தனியார் திருமண தகவல் மையத்தில் இவரது தகவல்களை பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த யுவராஜ்(50), என்பவர் கடந்த சில மாதங்களாக காயத்ரியிடம் செல்போனில் பேசி வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி வந்துள்ளார்.
மேலும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு காயத்ரிக்கு கண் திருஷ்டி பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் இதனால் ஒரு கோவிலுக்கு வரவேண்டும் எனவும் வரும்போது ஐந்து பவுன் நகையை எடுத்து வருமாறு கூறியதன் பேரில் காயத்ரி ஐந்து பவுன் நகையை எடுத்துக்கொண்டு தாம்பரத்திற்கு வந்த நிலையில் அங்கிருந்து காயத்ரியும், யுவராஜும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கு ஒரு பாத்திரத்தை வாங்கி அதில் 5 பவுன் நகையை போடும்படி யுவராஜ் கூறியதன் பேரில் காயத்ரி தான் கொண்டு வந்த ஐந்து பவுன் நகையை போட்டு விட்டார்
அதனை மூடிவிட்டு வீட்டில் பூஜை அறையில் கொண்டு போய் வைத்துவிட்டு மூன்று நாட்கள் கழித்து திறந்து பார்க்க வேண்டும் அப்போதுதான் கண் திருஷ்டி போகும் என கூறியுள்ளார்
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 03-06-2024
இதனை நம்பி அவரும் அந்த பாத்திரத்தை எடுத்து சென்று வீட்டின் பூஜை அறையில் வைத்து விட்டு மறுநாள் யுவராஜுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்ததால் சந்தேகம் அடைந்த காயத்ரி அந்த பாத்திரத்தை திறந்து பார்த்தபோது அதில் தங்க நகைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் வளையல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போதுதான் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது இது குறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்ததின் பேரில் போரூர் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு குற்றப்பிரிவ இன்ஸ்பெக்டர் அருணாச்சல ராஜா ஆகியோர் தலைமையில் நூதன முறையில் மோசடி செய்த யுவராஜை தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்து வந்த யுவராஜ் மேலும் ஒரு பெண்ணை அதே போன்று ஏமாற்றுவதற்காக சென்னை வந்தபோது மறைந்திருந்த போலீசார் யுவராஜை கைது செய்து அவரிடமிருந்து நான்கு பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்
மேலும் இவர் கன்னியாகுமரியிலும் இதே போல் ஒரு பெண்ணை மோசடி செய்து சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் அதே போல் செய்து வந்தது தெரியவந்தது கணவரை இழந்து மறு திருமணம் செய்ய பதிவு செய்யும் பெண்களை குறி வைத்து நூதன முறையில் அவர்களிடம் நகைகளை பறித்து செல்லும் நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.