சென்னை கனமழையால் நீர் தேங்கி மக்கள் கடும் அவதி.
Bala
UPDATED: Oct 15, 2024, 6:07:00 PM
சென்னை மாவட்டம்
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் திங்கட்கிழமை (அக்டோபர் 14) தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி, சில சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் திங்கட்கிழமை இரவு தொடங்கிய மழை இடைவிடாமல் நீடித்து, நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
முதல் நாளிலேயே தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்தது. சென்னையில் திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் தொடங்கிய மழை, முழு இரவும் விட்டு விட்டு பெய்தது.
Chennai Rain 2024
மழைநீர் தேங்கிய நிலை காலைப் பின் மழை தற்காலிகமாக ஓய்ந்த பின்னர், எட்டு மணிக்குப் பிறகு மீண்டும் கனமழைத் தொடங்கியது, இதனால் நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கி, பெரம்பூர், கணேசபுரம், சுந்தரம் பாயின்ட், துரைசாமி, மேட்லி போன்ற ரயில்வே சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. துரைசாமி சுரங்கப்பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளது.
பின்னர் கெங்குரெட்டி, வில்லிவாக்கம், சூரப்பட்டு சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டன. மழைநீர் தேங்கியதால், சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், நான்கு மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. பழைய மகாபலிபுரம் சாலையில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கனமழையால் சாலையில் நீர் பெரிதும் தேங்கியது, இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
Latest Chennai News Today In Tamil
அதேபோல், தரமணி, வடபழனி, பட்டாளம், கே.கே. நகர், கோவிந்தன் சாலை போன்ற பகுதிகளில் நீர் தேங்கி போக்குவரத்து முடங்கியது.
சென்னையின் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுமானத்தில், வாகன நிறுத்துமிடத்திற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வேலைகள் நடந்துக்கொண்டிருந்தன. நேற்று இரவு கனமழை பெய்ததைத் தொடர்ந்து, கட்டுமானப் பகுதியைச் சுற்றிய கான்க்ரீட் சுவர் சரிந்து விழுந்தது. இதற்கு அருகிலிருந்த நெல்சன் டவர்ஸ் எனும் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகளின் அருகிலுள்ள நிலமும் இடிந்தது.
கனமழை
சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த குடியிருப்புகளில் வசித்து வந்ததால், அவர்கள் பெரும் அச்சத்திற்குள்ளானார்கள். தற்போது, உடனடியாக உலரக்கூடிய கான்க்ரீட் கொண்டு சரிந்த பகுதிகளை நிரப்பும் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
நாளை, அக்டோபர் 16, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.