3,500 ஆண்டு பழமையான மாமரத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு சுவைகளை கொண்ட மாங்கானிகள் காய்க்க தொடங்கியது
லட்சுமி காந்த்
UPDATED: May 31, 2024, 11:46:08 AM
பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்குவதும் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார்.
இக்கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா ,கர்நாடகா, மகாராஷ்டிரா ,ராஜஸ்தான், பீகார் ,உத்தர பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வியட்நாம் ,பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்ணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் .
வருகின்ற பக்தர்கள் ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு செல்கின்றனர். அதிலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் கருவறைக்கு பின்புற பிரகாரத்தில், ஸ்தலவிருட்சமாக ஒரு மாமரம் உள்ளது. இது சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தார் எனவும் கூறப்படுகிறது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் சோமஸ்கந்த வடிவில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார்.
இதனாலேயே பெரும்பாலான திருமணங்கள் இங்கு நடைபெற்று வருகிறது. இங்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
இங்குள்ள மாமரத்தின் நான்கு கிளைகளைகளும் ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கு வேதங்களை குறிக்கும் தெய்வீக மாமரம் என நம்பப்படுகிறது.
ALSO READ | மயிலாடுதுறையில் ஆற்று மணல் கடத்தல்.
ஒரே மரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளை தருகின்றது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் தற்போது பூக்கள் பூத்து மாங்காய்கள் காய்க்க தொடங்கி உள்ளது. மாமரத்தில் மாங்காய்கள் காய்த்துள்ளதைப் பக்தர்கள் வியந்து பார்த்து மகிழ்ச்சியுடன் மாமரத்தை வணங்கி செல்கின்றனர்.