சந்திரன் சாப விமோசன நிவர்த்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலயம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மகா ஸம்ப்ரோக்ஷணம்.
செந்தில் முருகன்
UPDATED: Apr 21, 2024, 2:09:56 PM
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமளரெங்கநாதர் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமான,
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுள் ஐந்தாவதாகவும் விளங்குகிறது. மேலும், சந்திரன் சாப விமோசன தீர்த்த தலமாகவும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயமாகும்.
இத்தகைய பல்வேறு பெருமை வாய்ந்த இக்கோயிலில் கடைசியாக 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழாண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் கோயிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில் பாலாலயம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கோயிலின் ராஜ கோபுரம், பெருமாள், தாயார், ஆண்டாள், ராமர், ஆஞ்சநேயர் சந்நிதிகள், கருட மண்டபம், ஏகாதசி மண்டபம், பங்குனி உற்சவ மண்டபம், திருத்தேர் மண்டபம், நான்கு கால் மண்டபம் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் புதுப்பிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்காக கடந்த 17 ஆம் தேதி யாகசாலை பூஜை விஷ்வக்ஸேனர் திருமஞ்சனம், ஆராதனம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் தொடங்கி 18 ஆம் தேதி யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. கும்பாபிஷேகம் தினமான இன்று காலை 7-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூரணஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்து வேத விற்பனர்கள் வேதங்கள் ஓத கோபுர கலசங்கள் மீது 10 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா ஸம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் ராமு உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பக்தர்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவிந்தா! கோவிந்தா!! என்று முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.