கோடை வெப்பம் தணிந்து மழை பெய்ய வேண்டி பூந்தமல்லி் ஊத்துக் காட்டு எல்லையம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் .
சுந்தர்
UPDATED: May 6, 2024, 8:05:27 AM
பூந்தமல்லி குமணன்சாவடியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற ஊத்துக் காட்டு எல்லையம்மன் கோயில். கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற இக்கோயிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோடைக் காலத்தின் வெப்பத்தை தணிக்கவும், மழை பெய்து நாடு செழிக்க வேண்டியும் அம்மனை குளிர்விக்கும் விதமாக அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் விஷேச பூஜைகளும் நடைபெற்றன.
இதையொட்டி பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் 1008 இளநீருடன் குமணன்சாவடி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர்.
உடன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம் வந்தது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த இளநீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா முன்னாள் நகர்மன்ற தலைவர் பூவை ஞானம், நிர்மலா ஞானம், பிரேம்குமார் மற்றும் ரவி குருக்கள், ராமு பூசாரி கோயில் நிர்வாகிகள், பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.