• முகப்பு
  • ஆன்மீகம்
  • காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோவிலின் பிரமோற்சவத்தின் நான்காவது நாளில் வரதராஜ பெருமாள் சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோவிலின் பிரமோற்சவத்தின் நான்காவது நாளில் வரதராஜ பெருமாள் சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

லட்சுமி காந்த்

UPDATED: May 24, 2024, 6:49:20 AM

உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கடந்த 20 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் நான்காம் நாள் உற்சவத்தையொட்டி, தனக்கென்று ஒளியில்லாமல், சூரியனின் ஒளியைப் பெற்று சந்திரன் ஒளிர்கிறது. 

பகலில் நேரடியாக ஒளி கொடுக்கும் சூரியன், இரவில் சந்திரனை வைத்து உலகுக்கு ஒளி கொடுக்கிறார்.

அதனால் குளிர்ந்த ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மலர்களால் ஆன மாலையை அணிந்து கொண்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கோவிலிருந்து "சந்திர பிரபை" வாகனத்தில் புறப்பட்டார் .

டி.கே.நம்பி தெரு, ரங்கசாமி குளம், மூங்கில் மண்டபம்,பேருந்து நிலையம் வழியாக மேற்கு ராஜவீதி வழியாக வந்து கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் மண்டகபடி கண்டருளினார்.

இந்த மண்டபடியின் போது வரதராஜ பெருமான் குலுங்கி குலுங்கி சென்று மண்டபத்தில் இறங்கிய காட்சி அங்கிருந்த பக்தர்களிடையே மெய்சிலிக்க வைத்தது.சந்திர பிரபை வாகனத்தில் வரதராஜ பெருமாள் உற்சவர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் மண்டபடி கண்டருளிய வரதராஜ பெருமானுக்கு தூப, தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு ராஜவீதிகள் வலம் வந்து மீண்டும் திருக்கோயிலை சென்றடைந்தார்.

வரதராஜ பெருமாள் வீதி உலாவில் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டதோடு, ஆரத்தி காண்பித்து கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவச கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

 

VIDEOS

Recommended