குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடப்பாண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார விழா மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறாது.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 5, 2024, 9:22:38 AM
காஞ்சிபுரம் மாவட்டம்
தமிழ் கடவுள் என அழைக்கக்கூடிய முருகப்பெருமானின் பெருமையை விளக்கும் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் குமர கோட்டம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவானது விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் 2ம் தேதி முதல் நான்கு கால லட்சார்ச்சனை நடந்து வருகிறது. கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழாவின் 4 ம் நாளான இன்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன.
உற்சவர் ஆறுமுகப் பெருமான், வள்ளி, தெய்வானையருடன் ரோஜா, சாமந்தி, மல்லி, முல்லை, அலரி என, பல்வேறு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவில் வெளிபிரகாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் பிரகாரத்தை 108 முறை வலம் வந்து முருகப் பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால், நடப்பாண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார விழா மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறாது. இதனால், பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றிவர அனுமதி இல்லை.
வெளிபிரகாரத்தை மட்டுமே சுற்றி வரலாம் என, காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.