வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை மற்றும் இளைஞரால் துஸ்பிரயோகம்
வவுனியா
UPDATED: Sep 15, 2024, 10:52:21 AM
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பொலிசார் குறித்த சிறுமியிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குறித்த சிறுமியை தந்தை துஸ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளதுடன், குறித்த சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் கடந்த மாதம் 28 ஆம் திகதி குறித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த தந்தை தனது மூத்த மகளை 2020 ஆம் ஆண்டு துஸ்பிரயோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டு அது தொடாடபான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.