உலகையே உலுக்கிய இந்த கோரப்படுகொலை சம்பவத்தின் 56 ஆம் ஆண்டு நினைவு தினம்.

செ.சீனிவாசன்

UPDATED: Dec 25, 2024, 11:18:58 AM

நாகப்பட்டினம் மாவட்டம்

ஒருபடி நெல்லை கூலியாக உயர்த்தி கேட்டதற்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தற்போதைய நாகை மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை சம்பவத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 தலித் சமூகத்தினர் ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.

உலகையே உலுக்கிய இந்த கோரப்படுகொலை சம்பவத்தின் 56 ஆம் ஆண்டு நினைவு தினம் வெண்மணி கிராமத்தில் அமைந்துள்ள வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் இன்று அனுசரிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், நாகை எம்பி வை.செல்வராஜ், நாகை .மாலி ஆகியோர் வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து நினைவு ஸ்தூபியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் மற்றும் செங்கொடியை கே.பாலகிருஷ்ணன் ஏற்றிவைத்தார்.

வெண்மணி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி 

56 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க வெண்மணி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டுமில்லாமல் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனை உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் வெண்மணி நினைவு ஸ்தூபியில் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறுகையில் ; கிராமத்தில் உள்ள நிலங்கள், கனிம வளங்களை, கடல் வளங்களை கார்பிரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து வரும் பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. 

இதுவரை கிராமப்புறங்களில் உள்ள விவசாய தொழிலாளிகளுக்கு வருமானம் இல்லை. தமிழ்நாட்டில் எத்தனை ஆட்சி மாறினாலும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற எங்களது போராட்டம் தொடர்கிறது என்று கூறிய அவர், பஞ்சமி நிலங்களை மீட்க எங்களது போராட்டம் தொடரும் என்றார். திமுக அரசு இந்த அடிப்படையான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்த கே.பாலகிருஷ்ணன், 

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா இதுவரை மன்னிப்பு கேட்காமல் பேசியதை நியாயப்படுத்தி வருகிறார் என்றும்,

நாடாளுமன்றம் முடங்கி இதுவரை நாடுமுழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது என்றார். அமித்ஷா பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியவர், அமித்ஷா பேசியது தவறு என்றார். வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு வரும் அமித்ஷாவை எதிர்த்து இடதுசாரி அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்று அறிவித்தார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ள அழைப்புக் கொடுத்தார். தமிழ்நாட்டில் அறை நூறாண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சியில் உள்ளதாக கூறிய கே.பாலகிருஷ்ணன், பெரியாரின் வாரிசுகள் பெரியாரை தூக்கி பிடிப்பவர்களே அதிகம் உள்ள நிலையில், இன்றுவரை தமிழகத்தில் குழந்தை திருமணம், பெண்ணடிமைத்தனம், ஆனவக்கொலை என அனைத்தும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது என வேதனை தெரிவித்தார்.

உரிமைகளை மட்டுமே எங்களது கட்சியுடன் வலியுறுத்தி வருகிறோம் அதை வைத்து நாங்கள் தவெக வுக்கு தாவும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று கூறினார்.

ஏற்கனவே நீண்டகாலம் இருந்த கல்விமுறையை ஒன்றிய அரசு ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன் கிராமப்புறத்தில் உள்ள அடித்தட்டு தாழ்த்தப்பட்ட மக்களை தேர்ந்தெடுக்க கொண்டு வந்த கல்வி முறையை மாற்றவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்துவருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமலாக்கத்துறை சோதனை எப்போது நடந்தாலும் அண்ணாமலை எப்பொழுதும் ஒரே பஜனையை பாடிக்கொண்டு இருக்கிறார் என்று விமர்சித்தார்.

வன்னியர் இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவுக்கு ஆதரவு என ராமதாஸ் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள குழப்பங்கள் போதாது ராமதாஸ் பெறுவது புதிய குழப்பம் என்றும், ஏற்கனவே பாமக ஆதரவு இல்லாமல்தான் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது என்றார். ஏற்கனவே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அவசர கெதியில் கொண்டு வந்தது என்று நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக கூறினார். 

வன்னியர்கள் முழுவதும் பாமக ராமதாஸ் பக்கம் இருப்பதாக கூறுவது தவறு என கண்டித்த கே.பாலகிருஷ்ணன், எந்த சாதிகட்சி பின்பும் அந்த சாதி மக்கள் முழுவதும் கிடையாது என்று தெரிவித்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended