• முகப்பு
  • விவசாயம்
  • இயற்கையை வணங்கி ஏர்பூட்டும் உழவு பணியை தொடங்கும் நல்லோர் திருவிழா கிராம பாரம்பரிய முறைப்படி வெகுசிறப்பாக நடைபெற்றது.

இயற்கையை வணங்கி ஏர்பூட்டும் உழவு பணியை தொடங்கும் நல்லோர் திருவிழா கிராம பாரம்பரிய முறைப்படி வெகுசிறப்பாக நடைபெற்றது.

மாரியப்பன்

UPDATED: Apr 22, 2024, 7:18:00 PM

சித்திரைத்திங்கள், பிறந்துள்ள புதிய ஆண்டில் விவசாயிகள் தங்களது வயலில் வேளாண் பணிகளை துவங்குவதற்கு முன்பாக கிராம பொது நிலத்தில் ஒன்று கூடி இயற்கையை வணங்கி பொன்னேர் பூட்டி அதன் பிறகே விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் வேளாண் சாகுபடியை தொடங்குவது தமிழக கிராமங்களில் இன்றளவும் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வாகும்.

அந்த வகையில் பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டின் தொடக்கமான சித்திரைத்திங்கள் முதல்நாளில் கிராமமக்கள் ஒன்று கூடி பஞ்சாங்கம் பார்த்து நல்லேர் திருவிழா நடத்த நாள் குறித்து பின்னர் நல்லேர் திருவிழா நடத்துவது வழக்கம்.

அதன்படி "நல்லேர்" திருவிழா இந்தாண்டும் இன்று நடைபெற்றது.இவ்விழாவின் போது கையில் காப்பரிசி, பழம், தாம்பூலம் வைக்கப்பட்ட சீர் தட்டுகளை ஏந்திய பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் தாரை தப்பட்டை முழங்கிட ஊர்வலமாக ஊருக்கு பொதுவான நிலத்திற்கு அவற்றை எடுத்து சென்றனர்.

பின்னர் அங்கு வைத்து தங்களுக்கு உணவளிக்கும் பூமித்தாயை வணங்கிய அவர்கள் ஏரில் பூட்டிய காளைகளுக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து சூடம் ஏற்றி சூரியனுக்கு தீபாராதனை காட்டினர். அதை தொடர்ந்து இந்தாண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து மகசூல் பெருக வேண்டி விவசாயிகள் ஏர் பிடித்தனர்.

நல்லேர் பிடிப்பவரின் ஏர் கலப்பையின் கொழுவின் முன் வைக்கப்படும் மஞ்சள் பிள்ளையார் எந்த பக்கம் சாய்கிறதோ அதை வைத்து இந்த ஆண்டின் மழை பொழிவை விவசாயிகள் கனிப்பது இக்கிராமத்தில் ஐதீகம்.

இந்த நிகழ்சியின் போது காளைகள் பூட்டிய ஏரினை குறைந் அளவே கானமுடிந்தது.காளைகள் பூட்டிய ஏரினை பின்தள்ளி நவீன கால உழவு எந்திரமான டிராக்டர்களே அதிகம் வலம் வந்தன.

பொன்னேர் நிகழ்வில் குழந்தைகள் உட்பட கிராமத்தினர் கூடியது பாரம்பரிய நினைவூட்டலாக பார்க்கப்பட்டது.

கடந்த 40 ஆண்டு சளுக்கு முன் வரை சுமார் 100 மேற்பட்ட ஜோடி காளைகள் பூட்டி திருவிழா போல் கொண்டாடப்பட்டு வந்த இந்த நல்லேர் திருவிழா இன்று நவீன வேளாண்மைக்கு மாறியதால் காளைகளே காணாமல் போய் வளம் நிறைந்த நமது மண்ணும் மலடாகி வருகிறது என்பதையே உணர்த்துவதாக இருந்தது.

எதிர்காலத்தில் மத்திய மாநில அரசுகள் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தினால் மட்டுமே வளம் கூடி தமிழகம் பசுமையுறும் என்கின்றனர் விவசாயிகள்.

 

VIDEOS

Recommended