புவனகிரி அருகே வாய்க்கால் தூர் வார வந்த ஜேசிபி எந்திரத்தை தடுத்து நிறுத்திய விவசாயிகள்.
சண்முகம்
UPDATED: May 4, 2024, 7:42:59 PM
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் பாசன வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால் செல்கிறது.
பாசன வாய்க்காலில் உடைந்துள்ள தண்ணீர் தேக்கும் பாசன மதகு நீண்ட காலமாக உடைந்து கிடப்பதால் வாய்க்காலில் செல்லும் தண்ணீர் விரயமாகி வருகிறது.
இதனால் கிளைவாக்கால் மூலம் மேட்டுப்பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயிகள் பயிர் செய்த பயிர்கள் காய்ந்து கருகி உள்ளன. பல நேரங்களில் சாகுபடி செய்துள்ள வயல்களில் கருகிய பயிர்களை மாடுகளை விட்டு மேய விட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி எந்திரத்தை எடுத்து வந்து பாசன வாய்க்கால் அருகில் உள்ள கிளை வாய்க்காலை தூர்வார முயற்சித்தனர் எதனால் அங்கு கூடிய விவசாயிகளும் கிராம மக்களும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீங்கள் கிளை வாய்க்காலை தூர்வார வேண்டாம் பாசன வாய்க்காலில் உடைந்து கிடக்கும் தண்ணீர் தேக்கும் மதகை சரி செய்து விட்டு பின்பு தூர் வாருங்கள் என தெரிவித்தனர்.
அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் எதாக இருந்தாலும் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என கூறினர்.இதனால் விவசாயிகளுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் பாசனத்திற்கு செல்லும் பொழுது ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.
ஆனால் தற்போது தண்ணீர் தேக்கும் மதகு உடைந்து கிடப்பதால் கிளை வாய்க்காலுக்கு செல்ல வேண்டிய தண்ணீர் விரயமாகி போகிறது.
அதனால் உடைந்து கிடக்கும் மதகை சரி செய்து வட்டு பின்பு கிளை வாய்க்காலை தூர் வாருங்கள் என விவசாயிகள் நீண்ட நேரமாக தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்தனர்.
விவசாயிகள் உறுதியாக இருப்பதை அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேறு வழியில்லாமல் தூர்வார வந்த தங்களது ஜேசிபி வாகனத்தை திரும்ப எடுத்து சென்றனர்.
மேலும் வாய்க்கால்களில் தூர் வாருவதாக கூறிக்கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரைகுறையாக தூர் வாருவதாக கூறும் விவசாயிகள் வாய்க்கால் உள்ளே விழுந்து கிடக்கும் மரங்களை பல இடங்களில் அகற்றுவதே இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.