புவனகிரி பகுதியில் வாய்க்கால் தூர் வராமல் போனதால் 5 ஆயிரம் ஏக்கர் மழை நீர் புகும் அபாயம்
சண்முகம்
UPDATED: Nov 16, 2024, 10:26:02 AM
கடலூர் மாவட்டம்
புவனகிரி அருகே பு. சித்தேரி மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் வாய்க்கால்களில் அடைத்துக் கொண்டுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வாராமல் போனதால் ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேல் வாய்க்காலில் செல்ல வேண்டிய மழை வடிகால் நீர் விவசாய வயல்களுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை வைத்தால், கோரிக்கை மனுவை பெற்றுக் கொள்வதோடு சரி நடவடிக்கை எடுப்பதில்லை என அதிகாரிகளின்மேல் கடுமையான குற்றச்சாட்டுகளை விவசாயிகள் வைத்து வருகின்றனர்.
லேசான மழை
இப்பகுதி விவசாய விலை நிலங்கள் தாழ்வான பகுதிகளாக இருப்பதால் லேசான மழை பெய்தாலே மழை வெள்ளநீர் வயல்களில் சூழ்ந்து பாதிப்புகளை அதிகளவில் ஏற்படுத்திவிடும்.
கடந்த காலங்களில் அதிகம் சேதமடைந்த பகுதிகளில் தான் தற்போது வாய்க்கால்களில் தூர்வாராத நிலை இருந்து வருகிறது.
எப்போதுமே வாய்க்கால்கள் அதிக மேடாகவும், ஆகாயத்தாமரை உள்ளிட்ட புதர்கள் அடைத்துக் கொண்டுள்ளதாகவும் இதனால் மழை வெள்ள வடிகால் நீர் வெளியேற வழி இல்லாமல் போகிறது என தெரிவிக்கும் விவசாயிகள், போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வாராமல் போனால் புவனிகிரி மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதியில் கடுமையான போராட்டத்தை தொடருவோம் எனவும் அரசின் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
பயிர் காப்பீடு
இது போலவே பயிர் காப்பீட்டுக்காண பிரிமியத்தை கட்ட சொல்லும் அதிகாரிகள் அதற்கான இழப்பீடுகளை தருவதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதால் தாங்கள் மிகவும் வேதனையடைந்து உள்ளோம் எனவும், தங்களுக்கான பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் வேதனையோடு கோரிக்கை வைத்தனர்.