இலவம் பஞ்சுகள் நல்ல விலை கிடைத்தும் பலன் பெறமுடியாமல் தவிக்கும் விவசாயிகள்.
ராஜா
UPDATED: May 2, 2024, 10:22:07 AM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, காமராஜபுரம், முருக்கோடை, தங்கம்மாள்புரம், கோரையூத்து, அரசரடி, வாலிப்பாறை, காந்திபுரம் உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கோடை காலம் தொடங்கும் நேரத்தில் இலவம் பஞ்சு சாகுபடியும் தொடங்கும். சுமார் 3 மாதங்கள் இலவம் பஞ்சு சாகுபடி இருக்கும். இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையினால் இலவம் பஞ்சு விளைச்சல் ஓரளவு அதிகரித்து காணப்படுகிறது.
அறுவடைக்கு தயாராக இருந்த இலவம் காய்கள் தற்போது சுட்டெரித்து வரும் வெயினால் மரத்திலேயே காய்கள் வெடித்து பஞ்சு காற்றில் பறந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒருகிலோ இலவம் பஞ்சு ரூ40 முதல் 50 வரையில் விற்கப்பட்ட நிலையில், தற்போது ஒருகிலோ ரூ.70 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை வரும் வாரங்களில் ரூ.100 வரை உயர வாய்ப்புள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயிலால் மரத்திலேயே இலவம் காய்கள் வெடித்து பஞ்சு காற்றில் பறப்பதால், நல்ல விலை கிடைத்தும் அதன் பலனை பெற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.