காட்டுமன்னார்கோவில் அருகே வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை.
சண்முகம்
UPDATED: Oct 25, 2024, 9:58:19 AM
கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவில் அருகே நத்தமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் பலர் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட வெற்றிலை பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். வெற்றிலை பயிர் விவசாயம் என்பது இருப்பதிலேயே கடினமான விவசாய பயிராகும்.
இவ்வாறான நிலையில் கடினமாக பாடுபட்டு வெற்றிலை பயிர்களை வளர்த்து வந்த நிலையில் தற்போது வெற்றிலைக்கு நிலையான விலை இல்லாமல் போனதால் ஒரு கட்டு வெற்றிலையானது 150 ரூபாயில் இருந்து 160 ரூபாய் வரை விலை விலை போவதாக வேதனையோடு விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
ஆட்கள் வைத்து வெற்றிலை பறிக்கும் கூலிக்கு கூட இந்த விலை உதவாது என தெரிவிக்கும் விவசாயிகள் 100 ஆண்டுகள கடந்து பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்தாலும் வெற்றிலைக்கான விலை இல்லாமல் போவதால் தங்களது நிலை வேதனை, சோதனைகளும் நிறைந்ததாக இருக்கிறது.
தங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு வெளியே விற்கப்படும் வெற்றிலையானது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் தங்களுக்கு கிடைப்பது என்னவோ ஒரு கட்டுக்கு 150 லிருந்து 160 ரூபாய் வர மட்டுமே கிடைக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்ட தங்களுக்கு தற்போது வீராணம் ஏரி பகுதி தண்ணீரும், மழையும் ஓரளவுக்கு சாதகமாக இருந்து வருவதால் விளைச்சலும் ஓரளவுக்கு இருப்பதாலும் விலை என்னவோ முற்றிலும் குறைந்து போய்விட்டது.
தங்களுக்கு ஒரு கட்டு வெற்றிலைக்கு சராசரியாக 300 ரூபாய் விலை கிடைத்தால் தங்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைத்ததாக இருக்கும் எனவும், தாங்கள் கடன் பட்டு செய்து வரும் வெற்றிலை விவசாயத்திற்கு ஆறுதல் தருவது போலவும் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இப்பகுதி வெற்றிலைகள் அதிக மருத்துவ குணம் மிக்கதாகவும், அதிகம் ருசி மிக்கதாகவும் இருக்கிறது. ஆனால் இப்பகுதி வெற்றிலைகளை எங்கு சென்றாலும் விலை இல்லாமல் போகிறது.
நூறாண்டுகளை கடந்து பாரம்பரியமாக வெற்றிலை விவசாயம் செய்து வருவதால் வயல்களை வெறுமனே போட்டு வைக்கவும் மனதில்லாமல் தொடர்ந்து வெற்றிலை விவசாயம் செய்து வருகிறோம்.
தங்களுக்கு அரசு நிலையான விலை ஒரு கட்டு வெற்றிலைக்கு 300 ரூபாய் கிடைக்க வேண்டும். வெற்றிலை விற்பனைக்கு என்று அரசு சந்தை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
பல விவசாயிகளை ஒருங்கிணைக்கும் விதமாக வெற்றிலை விவசாயிகளுக்கான குழுக்களையும் அரசே உருவாக்க வேண்டும் என தெரிவிக்கும் விவசாயிகள், தங்களுக்கு எப்போது விடிவு கிடைக்கும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் தங்களுக்கு வீராணம் ஏரியிலிருந்து தடையில்லாமல் பாசனத்திற்கு தண்ணீர் தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.