• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

S.முருகன்

UPDATED: May 18, 2024, 1:22:10 PM

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறி அகற்றுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் வீடுகளை கணக்கெடுத்து நேற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இன்று குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த பகுதியில் கண்களில் கருப்பு துணியை கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கூவம் நதிக்கரையை ஒட்டியுள்ள இந்த பகுதி மேடான இடத்தில் உள்ளது. இதற்குமுன் பல தடவை மழை வெள்ளத்தின் போதும் சிறிதுகூட இந்த பகுதி பாதிக்கப்படவில்லை. 

திருவேற்காட்டின் பூர்வ குடிகளான நாங்கள் பரம்பரை பரம்பரையாக 200 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குடியிருந்து வருகிறோம்.

இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் ஆதி திராவிடர்கள் . இந்த ஊரின் பூர்வீக குடிமக்களான எங்களின் இந்த குடியிருப்புகளை அகற்றக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளோம்.

ஆனால் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .

பல தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசித்து வரும் நிலையில் இதுவரை எந்தவித வெள்ள பாதிப்பும் ஏற்படுவதில்லை. எத்தனையோ பெரு வெள்ளம் வந்த போதும் எங்கள் குடியிருப்புகள் சேதமடையவில்லை.  

இந்த இடங்களில் 26 நபர்களுக்கு கிராம நத்தமாக வகைப்படுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 160 பேர்களுக்கு கிராம நத்தமாக வகைப்பாடாக மாற்றம் செய்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது

மனுவை பரிசீலத்தை நீதிபதிகள் பூந்தமல்லி வட்டாட்சியர் அவர்களை நேரில் சென்று விசாரணை செய்து முடிவெடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர் 

ஆனால் வட்டாட்சியர் முறையாக விசாரணை செய்யாமல், எங்களின் எந்தவித ஆவணத்தையும் ஆய்வு செய்யாமல் தன்னிச்சையாக உத்தரவு பதிவுத்து குடியிருப்புகளை அகற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். 

இந்த பகுதியில் காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சராக மூன்று கிணறுகள் திறந்து வைக்கப்பட்டது. 70 ஆண்டு பழமையான அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

மிகவும் பூர்வீகமாக நீண்ட காலமாக குடியிருந்து வரும் எங்கள் குடியிருப்புகளை அகற்றக்கூடாது. 

வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை நாங்களே அகற்றித் தருகின்றோம் . பூர்வீக குடிமக்களான எங்களின் குடியிருப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது தெரியவில்லை.

இந்த குடியிருப்புகளை அகற்றி அதிகாரிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை என்று அவர்கள் கூறினார்கள். 

இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஒட்டி திருவேற்காடு போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

VIDEOS

Recommended