• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மயிலாடுதுறையில் துப்புரவு ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து திருவேற்காட்டில் கண்டன ஆர்ப்பாட்டம். 

மயிலாடுதுறையில் துப்புரவு ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து திருவேற்காட்டில் கண்டன ஆர்ப்பாட்டம். 

S.முருகன்

UPDATED: Jun 2, 2024, 11:42:46 AM

மயிலாடுதுறை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து திருவேற்காடு நகராட்சியில் துப்புரவு அலுவலர்கள், ஆய்வாளர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை நகராட்சியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கச்சேரி சாலையில் உள்ள தனியார் பிரியாணி கடையில் துப்புரவு ஆய்வாளர் பிருந்தா மற்றும் நகராட்சி ஊழியர்கள் திடீர் சோதனை மேற்கொண்டு அங்கிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

அப்போது கடை உரிமையாளர் மற்றும் 20 பேர் கொண்ட கும்பல் துப்புரவு ஆய்வாளர் பிருந்தாவிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை பறித்ததுடன் அவரை தாக்கி தகாத வார்த்தையில் பேசினர்.

இதுகுறித்து நகராட்சி சார்பில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் துப்புரவு ஆய்வாளரை தாக்கிய கடை உரிமையாளர் உள்ளிட்டோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மேலும் அந்த கடைக்கு சீல் வைக்கப்படவும் இல்லை. இதனை கண்டித்து திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் துப்புரவு அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மயிலாடுதுறை துப்புரவு ஆய்வாளரை தாக்கிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி துப்புரவு அலுவலர் குமார், பூந்தமல்லி நகராட்சி துப்புரவு அலுவலர் வெயில்முத்து, திருவேற்காடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் நாகராஜ் மற்றும் துப்புரவு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended