கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது.
கோபி பிரசாந்த்
UPDATED: Jun 23, 2024, 6:43:39 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட 140க்கும் மேற்பட்டோர் விழுப்புரம், புதுச்சேரி, சேலம், மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தது இந்த சம்பவத்தின் துயரத்தை அதிகரிக்கிறது.
இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் இந்த விசாரணையை முன்னெடுத்து வருகின்றார்.
இந்த சம்பவத்தில் சாராய விற்பனையாளர்கள் கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மேலும் மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ப்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப்ப்ராஜ் ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கச்சிராபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், விஷ சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கைது செய்யப்பட்டார். மதுரவாயலைச் சேர்ந்த சிவக்குமார் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை இந்த வழக்கில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 57 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விஷ கள்ளச்சாராயத்திற்கு மெத்தனால் சப்ளை செய்தவர் சிவக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.