லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக உதவியாளர் கைது.

JK

UPDATED: May 29, 2024, 1:53:05 PM

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கையன் மகன் அந்தோணி (46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் செய்து கொடுத்து வருகிறார்.

தற்போது திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டு அதற்கான வேலைகளை செய்து வருகிறார்.

அந்த வீட்டிற்கு முன்பு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்த கம்பத்தை சற்று தள்ளிப் போடுவதற்கு கிராப்பட்டியில் உள்ள உதவி செயற் பொறியாளர், இயக்கலும் காத்தலும், மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழகம் அலுவலகத்தை அணுகி அங்கிருந்த வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் கூறியதன் பேரில் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி உள்ளார்.

அதன் பிறகு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் இடத்தினை பார்வையிட்டு எஸ்டிமேட் தயார் செய்து கொடுத்துவிட்டு 35ஆயிரம் ரூபாய் ஆன்லைனில் கட்டணம் செலுத்துமாறு அந்தோணியிடம் கூறியுள்ளார்.

அதன் பேரில் அந்தோணி உயிர் மின்னழுத்த கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு 35 ஆயிரம் கட்டணம் ஆன்லைன் மூலம் 15.4.2024 அன்று செலுத்திவிட்டு அதன் ரசீதினை எடுத்துக் கொண்டு வணிக உதவியாளர் அன்பழகன் இடம் கொடுத்துள்ளார்.

அதற்கு அன்பழகன் ஒரு மாதம் கழித்து தன்னை வந்து பார்க்க வேண்டுமாறு கூறியுள்ளார். அதன் பேரில் அந்தோணி நேற்று (27.5.24) காலை சுமார் 11.30 மணி அளவில் மேற்படி அன்பழகனை கிராபட்டியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மின் கம்பம் மாற்றம் குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு அன்பழகன் உங்க வேலை முடிக்க வேண்டுமென்றால் 20ஆயிரம் கொடுத்தீர்கள் என்றால் சீக்கிரமே முடித்துக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு அந்தோணி தன்னால் அவ்வளவு தொகை தர இயலாது என்று கூறியதன் பேரில் அன்பழகன் 5000ம் குறைத்துக் கொண்டு, 15ஆயிரம் கொடுத்தால் மட்டுமே உங்களது வேலையை செய்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை வந்து காவல்துணை கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று காலை 11மணியளவில் அந்தோணியிடமிருந்து அன்பழகன் லஞ்சமாக 15,000 பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். 

உதவி செயற்பொறியாளர் அலுவலகம், இயக்கலும் காத்தலும், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிரமான கழகம், கிராப்பட்டி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 

VIDEOS

Recommended