காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை 60 ஆயிரம் பணம் மற்றும் பட்டாசு பெட்டிகள் பறிமுதல்.
லட்சுமி காந்த்
UPDATED: Oct 24, 2024, 12:56:43 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் காரைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகமாக லஞ்சம் வாங்கப்படுவதாக வருகின்ற புகாரை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர் மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், அலுவலக ஊழியர்கள், வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலகத்திற்கு வந்த பயனாளிகள் சிலர் என அனைவரிடமிருந்து ரூ. 60 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மீடியேட்டராக (தரகர்களாக) செயல்பட்டு வந்த அருகில் இருந்த ஜெராக்ஸ் கடை, பெட்டிக்கடை, ஸ்டேஷனரி கடை உள்ளிட்ட பல கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.