"வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவடைந்தது : சென்னை விமான சேவைகள் ரத்து"
Bala
UPDATED: Oct 15, 2024, 5:44:08 AM
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது
தெற்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மத்திய வங்கக் கடலில் நிலை பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இந்த மண்டலம் தொடர்ந்து வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு மற்றும் சிவப்பு அலர்ட்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 70.5 மிமீ மழையும், காஞ்சிபுரத்தில் 70 மிமீ மழையும் பதிவாகியுள்ளன. சென்னையில், மீனம்பாக்கத்தில் 52.9 மிமீ, நுங்கம்பாக்கத்தில் 42.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படாத வகையில், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதுவரை விமான சேவைகள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை எனினும், கனமழை எச்சரிக்கையால் பல பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
விமானங்கள் ரத்து
இதனால், இன்று (அக்டோபர் 15) பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பாடு செய்யவிருந்த 4 விமானங்கள் மற்றும் வருகை செய்யவிருந்த 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நேரங்களில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதால், பயணிகள் தங்கள் பயண விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமான புறப்பாட்டை சரிபார்த்து செயல்படுமாறு, சென்னை விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.