சென்னையில் கனமழை வருமா ? எந்த மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை ?
Bala
UPDATED: Dec 11, 2024, 1:17:22 PM
வங்கக்கடல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக தமிழ்நாடு பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. புதன்கிழமை (டிசம்பர் 11) இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
சென்னையில் மழை நிலைமை :
சென்னையில் மழை இன்று பகல் முதல் தொடங்கும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தீவிரமடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருந்தாலும் அதி கனமழை நிகழ்வதற்கான நிலைமை இல்லை.
டெல்டா மாவட்டங்கள் :
டெல்டா மாவட்டங்கள் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேற்கு மற்றும் உள் தமிழகம்
சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் கனமழை இருக்கும். மலைப்பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்பதால் அந்த பகுதிகளில் செல்ல வேண்டாம்.
தெற்கு மாவட்டங்கள்
மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரண்டு முதல் மூன்று நாட்கள் மழை பெய்யும். தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
பயண தடை
கொடைக்கானல் மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளுக்குச் செல்லுவதை அடுத்த மூன்று நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். பள்ளத்தாக்கு பகுதிகளில் மழை தீவிரமாக இருக்கும்.
முக்கிய தகவல்
புயலானது உருவாகும் வாய்ப்பு குறைவு, ஆனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு மலைப்பகுதிகள் மழைக்கான முக்கிய பகுதிகளாக உள்ளன என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.