மனைவியை குத்திக் கொன்ற கணவர்.
லட்சுமி காந்த்
UPDATED: Dec 11, 2024, 4:32:32 AM
காஞ்சிபுரம்
பிள்ளையார்பாளையம் ஆனந்தஜோதி தெருவைச் சேர்ந்தவர் மோகனவேல் (வயது 43). இவருக்கு புவனேஸ்வரி (வயது 37) என்பவருடன் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு 6 ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் உள்ளார். மோகனவேல் எம்பிஏ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
புவனேஸ்வரி காஞ்சிபுரம் நகரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்
குடும்பத்தினருடன் வசிக்க வேண்டும் என்பதற்காக மோகனவேல் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்து வேலைக்கு செல்வதற்காக வண்டலூரில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.
கொலை
சுமார் 2 மாதத்திற்கு முன்பு காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், ஆனந்தஜோதி தெருவில் மோகனவேல் தம்பதிகள் தன்னுடைய மகளுடன் குடியேறி உள்ளனர். தற்போது மோகனவேல் தையல் கடை வைத்துள்ளார். புவனேஸ்வரி எப்போதும் போல ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்சனை காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இரவு கட்டிலில் யார் படுப்பது என்று கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு கணவன் மனைவி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மோகனவேல் வீட்டில் இருந்த கத்தரிக்கோலால் புவனேஸ்வரியை குத்திக் கொலை செய்துள்ளார்.
Latest Crime News Today In Tamil
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார் உயிரிழந்த புவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மனைவியை கொலை செய்துவிட்டு வீட்டிலேயே பதுங்கி இருந்த மோகனவேலை கைது செய்த சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.